முந்தைய ஆண்டை விட 3 மடங்கு ஒன்றிய அரசுக்கு ரிசர்வ் வங்கி ரூ.87,416 கோடி டிவிடெண்ட்

மும்பை: ஒன்றிய அரசுக்கு கடந்த 2022-23 நிதியாண்டுக்கான டிவிடெண்டாக ரூ.87,416 கோடி வழங்க, ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்றிய அரசுக்கு கடந்த 2022-23 நிதியாண்டுக்கான டிவிடெண்ட் வழங்குவது குறித்து முடிவு செய்ய, ரிசர்வ் வங்கியின் 602வது இயக்குநர்கள் கூட்டம், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் நேற்று நடந்தது. இதில், கடந்த 2022-23 நிதியாண்டுக்கான டிவிடெண்டாக ரூ.87,416 கோடியை ஒன்றிய அரசுக்கு வழங்குவது என முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2021-22 நிதியாண்டில் டிவிடெண்டாக ரூ. 30,307 கோடி வழங்கப்பட்டது.

இத்துடன் ஒப்பிடுகையில் கடந்த நிதியாண்டுக்கான தொகை ஏறக்குறைய 3 மடங்கு அதிகமாகும். பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படும்போது நெருக்கடி காலத்தை சமாளிக்க ரிசர்வ் வங்கி உபரி நிதியை கையிருப்பில் வைத்துள்ளது. இந்த கையிருப்பு எவ்வளவு என்பதை ரிசர்வ் வங்கி தெரிவிப்பதில்லை. ஆனால், பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, ரிசர்வ் வங்கி உபரி நிதியை வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதற்கு கடும் நெருக்குதல்கள் ஏற்பட்ட நிலையில், அப்போதைய கவர்னர் உர்ஜித் படேல் பதவி விலகினார். இதனால் ஒன்றிய அரசு மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த சூழ்நிலையில், ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி தொகையில், முந்தைய ஆண்டை விட 3 மடங்கு அதிகமாக ஒன்றிய அரசுக்கு டிவிடெண்ட் வழங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post முந்தைய ஆண்டை விட 3 மடங்கு ஒன்றிய அரசுக்கு ரிசர்வ் வங்கி ரூ.87,416 கோடி டிவிடெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: