ரெட் பிக்ஸ் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு ஆஜர் பெண்களைப்பற்றி இழிவான கருத்தை தொகுத்து வழங்கி உள்ளீர்களே மனசாட்சி இல்லையா? எழும்பூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் அடுக்கடுக்கான கேள்வி

சென்னை: பெண்களை பற்றி இழிவான கருத்தை தொகுத்து வழங்கி உள்ளீர்களே உங்களுக்கு மனசாட்சி இல்லையா? என்று ரெட்பிக்ஸ் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டுவிடம் எழும்பூர் குற்றவியல் தலைமை நீதித்துறை நடுவர் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியுள்ளார்.  ரெட் பிக்ஸ் என்ற பெயரில் டிஜிட்டல் ஊடகம் நடத்தி வரும் பெலிக்ஸ் ஜெரால்டு சில நாட்களுக்கு முன் சங்கரை பேட்டி எடுத்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார்.

அதில் பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவு செய்து எவ்வித தணிக்கையும் இன்றி வெளியிடப்பட்டது.  இந்நிலையில், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கோவை சைபர் க்ரைம் போலீசார் சங்கர் மற்றும் ரெட் பிக்ஸ் நிறுவன உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு மீது வழக்கு பதிவு செய்தனர். பிறகு திருச்சி சிறையில் இருந்த பெலிக்ஸ் ஜெரால்டு பெண் காவலர்கள் பாதுகாப்புடன் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவர் கடந்த மே 31ம் தேதி வரை நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று சென்னை பெருநகர எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் பெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது எழும்பூர் குற்றவியல் தலைமை நீதித்துறை நடுவர் கோதண்டராஜ் அடுக்கடுக்கான கேள்விகளை பெலிக்ஸிடம் கேட்டார். எதற்கு டெல்லி போனீங்க, அங்குள்ள பிரஸ் கவுன்சிலில் புகார் கொடுக்க எதற்கு போனீங்க, நீங்க முதலில் பிரஸ் கவுன்சிலில் உறுப்பினரா?

ரூ.1 கோடி 10 லட்சம் சவுக்கு சங்கருக்கும், உங்களுக்கும் வங்கி பரிவர்த்தனை நடந்துள்ளதா? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டதற்கு அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, நீதிபதி பெலிக்ஸிடம் போலீசார் அதற்கான ஆதாரத்தை இணைந்து உள்ளனர் என்றார். மேலும் ஒரு நெறியாளராக இருந்து பெண்களை பற்றி இழிவான கருத்தை தொகுத்து வழங்கி உள்ளீர்களே, உங்களுக்கு மனசாட்சி இல்லையா, உங்கள் வீட்டிலும் பெண்கள் இல்லையா? இதை பார்க்கும் பெண்கள் அச்சம் அடைய மாட்டார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

The post ரெட் பிக்ஸ் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்டு ஆஜர் பெண்களைப்பற்றி இழிவான கருத்தை தொகுத்து வழங்கி உள்ளீர்களே மனசாட்சி இல்லையா? எழும்பூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் அடுக்கடுக்கான கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: