மண் சரிவு, வெடி விபத்தை தடுக்க தமிழக குவாரிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வுசெய்ய வேண்டும்: புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள குவாரிகளை மாதம்தோறும் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என துணை இயக்குநர்களுக்கு புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் சரவணவேல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகளில் அவ்வப்போது மண்சரிவு, வெடி விபத்து உள்ளிட்ட எதிர்பாராத காரணங்களால் குவாரிகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் உயிருக்கு ஆபத்து நேரிடுகிறது. குவாரி அனுமதி வழங்கும்போது அரசால் வழங்கப்படுகிற வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்காததே இதுபோன்ற எதிர்பாராத விபத்துகளுக்கு காரணமாக அமைகிறது.

எனவே, இனி வரும் காலங்களில் குவாரிகளில் அசம்பாவிதம் ஏதும் நிகழாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வரும் குவாரிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாதம்தோறும் நேரில் ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகிறது.எனவே, அனைத்து மாவட்டங்களில் பணியாற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் தங்களது மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குவாரிகளில் உள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக இம்மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 10 குவாரிகளை ஆய்வு செய்து ஆணையரகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மண்டல இணை இயக்குநர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி, மேற்படி மாவட்ட அலுவலர்களின் ஆய்வுப் பணிகளை தொடர்ந்து கண்காணிக்கவும், உரிய உத்தரவுகளை பிறப்பிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post மண் சரிவு, வெடி விபத்தை தடுக்க தமிழக குவாரிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வுசெய்ய வேண்டும்: புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: