வரும் செப்டம்பரில் அதிபர் பைடன் இந்தியா பயணம்: அமெரிக்க அதிகாரி தகவல்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் முறையாக வரும் செப்டம்பரில் இந்திய பயணம் மேற்கொள்வதில் ஆர்வமுடன் இருப்பதாக அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரி கூறி உள்ளார். அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி வெளியுறவு செயலாளர் டெனாலாட் லூ அளித்த சிறப்பு பேட்டியில், ‘‘இந்த ஆண்டு ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டை அமெரிக்கா நடத்துகிறது. ஜப்பான் ஜி7 அமைப்பிற்கு தலைமை ஏற்றுள்ளது. இந்தியா ஜி20 அமைப்பிற்கு தலைமை ஏற்றுள்ளது. இவ்வாறு நிறைய குவாட் உறுப்பு நாடுகள் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளன. இது நமது நாடுகளை இன்னும் நெருக்கமாகக் கொண்டு வருவதற்கு வழிவகுக்கிறது. ஜி20ல் இந்தியாவின் தலைமையானது உலகின் நன்மைக்கான சக்தியாக திகழும் திறனை மேலும் விரிவுபடுத்துகிறது.

வரும் செப்டம்பரில் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் பைடன் இந்தியா பயணம் மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வமாக உள்ளார். எனவே இந்த ஆண்டு இந்தியா, அமெரிக்கா உறவில் மிகப்பெரிய ஆண்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை’’ என்றார். 10 லட்சம் பேருக்கு விசா: இந்தியர்களுக்கு விசா வழங்குவது தொடர்பாக கூறிய உதவி செயலாளர் டொனால்ட் லூ, ‘‘இந்த ஆண்டு 10 லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இது ஒரு சாதனை எண்ணிக்கையாக இருக்கும். பணி செய்வோருக்கான எச்1பி விசா மற்றும் மாணவர்களுக்கான விசாக்களை வழங்குவதற்கு முன்னுரிமை தரப்படும்’’ என்றார்.

The post வரும் செப்டம்பரில் அதிபர் பைடன் இந்தியா பயணம்: அமெரிக்க அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: