பிளஸ் 2 ரிசல்ட் எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் (ரிசல்ட்) எப்போது வெளியாகும் என்பது குறித்து முதல்வருடன் கலந்து பேசி அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு, மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வில் தமிழ்நாடு புதுச்சேரியை சேர்ந்த 7,600 பள்ளிகளில் படித்த 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். தேர்வுகள் ஏப்ரல் 3ம் தேதி முடிந்த பிறகு 10ம் தேதியில் இருந்து விடைத்தாள் திருத்தும் பணி 70 மையங்களில் நடந்து வருகிறது. இந்த பணி 24ம் தேதியுடன் முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில், தற்போது டம்மி எண்கள் நீக்கி உரிய பதிவு எண்கள் போடும் பணி நடக்கிறது. அதற்கு பிறகு மதிப்பெண் பட்டியல்கள் தயாரிக்கப்படும். இதனால், தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: தேர்வு முடிவுகளை மே 5ம் தேதி வெளியிட ஏற்கெனவே தேர்வுத் துறை முடிவு செய்திருந்தது. ஆனால் பட்டியல் தயாரிக்கும் பணிகள் குறிப்பிட்ட தேதியில் முடியாது என்பதால் மே 7ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால், மே 7ம் தேதிதான் நீட் தேர்வு நடக்க உள்ளது. அதற்கு முன்னதாக பிளஸ்2 தேர்வு முடிவை வெளியிட்டால், நீட் தேர்வு எழுத ஏற்ற மனநிலை அமையாது. எனவே, இது குறித்து முதல்வரிடம் கலந்து பேசி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியை அறிவிப்போம். இவ்வாறு பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

The post பிளஸ் 2 ரிசல்ட் எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: