முதுநிலை நீட்தேர்வு திடீரென தள்ளி வைப்பால்; மாணவர்கள் அலைக்கழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்

சென்னை: முதுநிலை நீட்தேர்வு திடீரென தள்ளி வைப்பால் மாணவர்கள் அலைக்கழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை: நீட் தேர்வில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களும், குளறுபடிகளும் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகிறது. 2021ம் ஆண்டு நீட் தேர்வில் 720 க்கு 720 மதிப்பெண் பெற்றவர்கள் 2 பேர், 2022ம் ஆண்டு யாருமே முழுமையான மதிப்பெண் பெறவில்லை. 2023ம் ஆண்டு 2 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர், இதில் குழப்பத்திற்கான முக்கிய காரணம், 720க்கு 720 முழு மதிப்பெண்ணாக 67 பேர் பெற்றதும், அதன் தொடர்ச்சியாக 719, 718 போன்ற மதிப்பெண்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதும் தான். மொத்தம் 180 கேள்விகள். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். இவற்றுள் மாணவர் ஒரு கேள்வி விட்டு விட்டால் அவருக்கு 716 மதிப்பெண்கள் கிடைக்கும்.

அதுவே அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து அதில் ஒன்று தவறாக இருந்தால் அந்த மாணவருக்கு 715 மதிப்பெண்கள் தான் கிடைக்கும். இத்தகைய வரைமுறையில் உள்ள இந்த தேர்வில் இந்த ஆண்டு மாணவர்கள் 719, 718 போன்ற மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதற்கு தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண் வழங்கியதாக குழப்பியது. 23 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில் குறிப்பிட்ட 1563 மாணவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண் கொடுத்தது ஏன்? இந்த கருணை மதிப்பெண் யார் யாருக்கு எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது? எந்தெந்த தேர்வு மையங்களில் காலதாமதம் ஏற்பட்டது? ஏன் மற்ற மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கவில்லை? போன்ற கேள்விகளுக்கு தேசிய தேர்வு முகமையிடம் பதில் இல்லை.

மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடு நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் குற்றச்சாட்டுகளை ஒன்றிய அரசு மறுத்தது. தற்போது தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதை ஒன்றிய அரசு கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த நிலையில் தேசிய தேர்வு முகமை தலைவராக உள்ள சுபோத்குமாரை நேற்று திடீரென்று ஒன்றிய அரசு நீக்கி நீட் தேர்வு குழப்பங்களையும், குளறுபடிகளையும் மெய்ப்பித்துள்ளது. ஒன்றிய அரசின் குழப்பங்களின் தொடர்ச்சியாக இன்று காலை 9 மணிக்கு நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வை நேற்று இரவு 9 மணிக்கு தள்ளி வைத்துள்ளது.

நாட்டில் 297 நகரங்களில் நடைபெற இருந்த தேர்வில் 2,28,757 மாணவர்கள் கலந்து கொள்ள இருந்த நிலையில் சரியான திட்டமிடல் இல்லாமல் மாணவர்களை அலைக்கழிக்கும் நிலையில் ஒன்றிய அரசின் போக்கு உள்ளது. இதனால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி பல்வேறு உயிரிழப்புகள் தொடர்ச்சியாக ஏற்படுகிறது என்று நாம் தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில், கண்டுகொள்ளாத ஒன்றிய அரசின் மெத்தனப் போக்கால் இன்னும் எத்தனை குழப்பங்களும், குளறுபடிகளும் நடைபெறும் என்று கணிக்க முடியாத சூழலில் உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

The post முதுநிலை நீட்தேர்வு திடீரென தள்ளி வைப்பால்; மாணவர்கள் அலைக்கழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: