நாடாளுமன்றத்தில் வெளி விவகாரம் உள்பட 4 நிலைக்குழுக்களின் தலைவர் பதவி காங்கிரசுக்கு கிடைக்கும்

புதுடெல்லி: வெளிவிவகாரம்,வேளாண்மை, ஊரக வளர்ச்சி மற்றும் கல்வி துறை நிலைக்குழுவில் காங்கிரசுக்கு தலைவர் பதவி கிடைக்கும் என வட்டாரங்கள் தெரிவித்தன. வெளிவிவகாரம்,பாதுகாப்பு, நிதி மற்றும் உள்துறை போன்ற முக்கிய துறைகள் சம்மந்தப்பட்ட நிலைக்குழுக்களின் தலைவர் பதவி வகிப்பது தொடர்பாக ஆளும் பாஜ மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த நிலையில், வெளிவிவகாரம், வேளாண்மை, ஊரக வளர்ச்சி தொடர்பான மக்களவை நிலைக்குழுக்களின் தலைவர் பதவிகள் காங்கிரசுக்கு வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து, வட்டாரங்கள் தெரிவிக்கையில்,துறைகள் தொடர்பான 4 நிலைக்குழுக்கள் காங்கிரசுக்கு கிடைக்கும். இதில் மக்களவையில் மூன்றும், மாநிலங்களவையில் ஒரு நிலைக்குழுவுக்கும் காங்கிரஸ் தலைமை வகிக்க உள்ளது. வெளிவிவகாரம், வேளாண், கால்நடை பராமரிப்பு மற்றும் உணவு பதப்படுத்துதல்,ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைகள் தொடர்பான மக்களவை நிலைக்குழுக்களும்,கல்வி,பெண்கள், குழந்தைகள்,இளைஞர்கள் மற்றும் விளையாட்டு துறை தொடர்பான மாநிலங்களவை நிலைக்குழுவும் காங்கிரசுக்கு கிடைக்க உள்ளது என்றன.

முக்கிய துறையான வெளிவிவகாரத்துறையின் நிலைக்குழு 5 வருட இடைவெளிக்கு பின்னர் காங்கிரஸ் வசம் செல்கிறது.கடந்த 2014 முதல் 2019 வரை வெளிவிவகாரதுறை நிலைக்குழுவிற்கு மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தலைமை வகித்தார்.இதற்கு முன்னர் 3 நிலைக்குழுக்களின் தலைவர் பதவிகள் காங்கிரஸ் வசம் இருந்தது. மாநிலங்களவையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிலைக்குழுவுக்கு ஜெய்ராம் ரமேஷ், வணிகத்துறை நிலைக்குழுவுக்கு அபிஷேக் சிங்கி ஆகியோர் தலைவர்களாக இருந்துள்ளனர். மக்களவையில் ரசாயனம் மற்றும் உரம் தொடர்பான நிலைக்குழுவின் தலைவராக சசி தரூர் பதவி வகித்துள்ளார்.

The post நாடாளுமன்றத்தில் வெளி விவகாரம் உள்பட 4 நிலைக்குழுக்களின் தலைவர் பதவி காங்கிரசுக்கு கிடைக்கும் appeared first on Dinakaran.

Related Stories: