*இயற்கை அழகை ரசிக்க தங்கும் விடுதிகள் தயார்
மேட்டுப்பாளையம் : காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட பரளிக்காடு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பில்லூர் அணைக்கு அருகாமையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் காரமடை வனத்துறை சார்பில் பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம் பழங்குடியின மக்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது.
இயற்கை எழில் மிகுந்த பரளிக்காடு கோவை காந்திபுரத்தில் இருந்து 70 கிமீ தொலைவிலும், காரமடையில் இருந்து 30 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே இங்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பரளிக்காடு வரும் சுற்றுலா பயணிகள் https:// Coimbatorewilderness.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக புக் செய்து கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்துதான் வர வேண்டும்.
நேரடியாக வர சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. எனினும் சுற்றுலா பயணிகளின் வருகைக்கேற்ப நேரிலும் (ஆப் லைனில்) அனுமதிக்கப்பட்டு வருகிறது.
சுற்றுலா பயணிகளின் பயணம் முதலில் பூச்சமரத்தூரில் பழங்குடியினரின் சுக்கு காபியுடன் துவங்குகிறது. தொடர்ந்து அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சல், இயற்கை எழில் கொஞ்சும் பில்லூர் அணையின் பின்புற தோற்றம் உள்ளிட்டவற்றை மகிழ்ந்து கொண்டே இருக்கலாம். அதனை தொடர்ந்து பரளிக்காடு சூழல் சுற்றுலா பயணிகளுக்கு பில்லூர் அணையில் பரிசல் பயணம் பில்லூர் அணையின் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பரிசலை இயக்க அதில் லைப் ஜாக்கெட் அணிந்து அமர்ந்து பில்லூர் அணையின் அழகையும், மேற்கு தொடர்ச்சி மலையின் அழகையும் கண்டு ரசிக்கலாம்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரிசலில் பயணித்த களைப்போடு வரும் சுற்றுலா பயணிகளுக்கு 12க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினரின் ராகி களி, சிக்கன் குழம்பு, பிரியாணி, கீரை, குழம்பு, ரசம், தயிர், இனிப்பு உள்ளிட்ட உணவு வகைகள் தயார் நிலையில் இருக்கும். இதனைத்தொடர்ந்து, அத்திக்கடவு பவானி ஆற்றில் மூலிகை குளியல் வழங்கப்படுகிறது. இதில் ஆசை தீர அடர்ந்த வனப்பகுதிக்கு இடையே பல்வேறு மூலிகைகள் கலந்த பவானி ஆற்றின் நீரில் ஆனந்தத்துடன் குளியல் போடலாம். பின்னர், அங்கிருந்து சுற்றுலாப் பயணிகள் வழி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
பரளிக்காடு சூழல் சுற்றுலாவின் சிறப்பம்சமே பில்லூர் அணை பகுதியில் பரிசல் பயணம் மேற்கொள்வதுதான். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் பரிசல் பயணத்திற்கு வனத்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. தற்போது அணையில் 80 அடிக்கும் மேலாக தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் இந்த பரிசல் பயணம் மேற்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சூழல் சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலா மையத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை கண்டு ரசித்து வியக்கும் வகையில் காரமடை வனத்துறை சார்பில் மூன்று தங்கும் விடுதிகளும் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு விடுதியிலும் தலா 8 பேர் என மொத்தம் 24 பேர் வரை தங்க முடியும்.
இந்த விடுதியில் தங்குதல், பழங்குடி இன மக்கள் தயாரித்து வழங்கும் உணவு, பரிசல் பயணம், ஆற்றில் மூலிகை குளியல், மலையேற்றம், பறவை காணுதல் உள்ளிட்டவற்றிற்காக ஒரு நபருக்கு ரூ.2,300 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதில் வனத்துறையினர் எதிர்பார்த்த அளவு சுற்றுலா பயணிகள் வருகை இல்லை. இதனையடுத்து சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தொகை ஒரு நபருக்கு ரூ.1000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர கட்டணங்கள் செலுத்த தேவையில்லை.
மேலும், பரிசல் பயணத்திற்கு 4 பேர் பயணம் செய்ய ரூ.400 வசூலிக்கப்படுகிறது. சைவ, அசைவ உணவுகளுக்கு தனியாக பழங்குடியின மக்களிடம் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.இது குறித்து காரமடை வனச்சரகர் ரஞ்சித் கூறுகையில், ‘‘தற்போது கொளுத்தி வரும் வெயிலை சமாளிக்கவும், பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் தங்களது குழந்தைகளோடு பெற்றோர்கள் ஆர்வத்துடன் சூழல் சுற்றுலாவிற்கு வருகின்றனர்.
வந்தவுடன் அவர்களுக்கு பழங்குடியினரின் சுக்கு காபி, தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற பழங்குடியின பரிசல் ஓட்டிகளின் பாதுகாப்பான பரிசல் பயணம், தொடர்ந்து அறுசுவை உணவு, தொடர்ந்து மூலிகை குளியல் அனைத்தும் ஒரு நபருக்கு ரூ.600 என்ற கட்டணத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
முழுக்க முழுக்க பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்பட நடத்தப்படும் இந்த சூழல் சுற்றுலாவிற்கு சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. எனவே அவர்கள் அதிக அளவில் வருகின்றனர். இங்கு சனி, ஞாயிறு உள்ளிட்ட வார விடுமுறைகள் மற்றும் விசேஷ விடுமுறை தினங்களில் சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வருகிறது. சனி, ஞாயிறு உள்ளிட்ட வார விடுமுறையில் பரளிக்காடு சூழல் சுற்றுலா வருவதற்கு ஆன்லைன் முன்பதிவு அவசியம். மற்ற விசேஷ விடுமுறை தினங்களில் வருவதற்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப காரமடை வனச்சரக அலுவலகத்தில் நேரிலும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், தற்போது நாளொன்றிற்கு சுமார் 200க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இயற்கை அழகை கண்டு ரசித்து வருகின்றனர். பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலா மையத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை கண்டு ரசிக்கும் வகையில் காரமடை வனத்துறை சார்பில் கட்டி வைக்கப்பட்டுள்ள மூன்று தங்கும் விடுதியில் தங்கும் கட்டணம் தற்போது நபர் ஒன்றுக்கு ரூ.1000 நிர்ணயிக்கப்பட்டு தங்க அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனால் வழக்கமாக வரும் சுற்றுலா பயணிகளை காட்டிலும் தற்போது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
செப்டம்பர் மாதத்தில் இதுவரை சுமார் 600க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பரளிக்காடு சூழல் சுற்றுலாவை கண்டு ரசித்துள்ளனர். மேலும், கட்டண குறைப்பிற்கு பின்னர் பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலா தங்கும் விடுதியில் 32 பேர் தங்கி உள்ளனர். கட்டண குறைப்பிற்கு பின்னர் சூழல் சுற்றுலா தங்கும் விடுதியில் இந்த மாதத்தில்தான் அதிகம் பேர் புக் செய்து தங்கி உள்ளனர்’’ என்றார்.
The post சுற்றுலா பயணிகளை கவரும் பரளிக்காடு சூழல் சுற்றுலா… appeared first on Dinakaran.