* வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து துணை கமிஷனர் தலைமையில் 200 போலீசார் நடவடிக்கை
* துப்பாக்கிமுனையில் தொழிலதிபர்களை மிரட்டி பறித்த 400க்கும் மேற்பட்ட நிலப்பத்திரங்கள், வங்கி ஆவணங்கள் சிக்கியது
சென்னை: சேலையூர் அகரம் பகுதியில் அரசுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள 1 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த விவகாரத்தில், முக்கிய குற்றவாளியான என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்ட கூலிப்படை தலைவன் சீசிங் ராஜாவுக்கு சொந்தமான வீடு மற்றும் உறவினர்கள், கூட்டாளிகளுக்கு சொந்தமான 14 இடங்களில் நேற்று துணை கமிஷனர் தலைமையில் 200 போலீசார் வருவாய் துறை அதிகாரிகளுடன் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர்.
ஆந்திர மாநிலம் சித்தூரை பூர்வீகமாக கொண்டவர் சீசிங் ராஜா (51). முதலில் சிறுசிறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். பின்னர் படப்பை குணாவுடன் இணைந்து கொலை உள்ளிட்ட பெரிய குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். அந்த நட்பு மூலம் கடந்த 2006ம் ஆண்டு ரமணி என்பவரை சீசிங் ராஜா வெட்டி கொலை செய்தார். அதன் பிறகு 2008ம் ஆண்டு வண்டலூர் அடுத்த ஓட்டேரி பகுதியை சேர்ந்த நடராஜ் என்பவரை வெட்டி படுகொலை செய்தார்.
அதே ஆண்டு ராஜமங்கலம் காவல் எல்லையில் விஜி என்பவரை வெட்டி படுகொலை செய்தார். 2010ம் ஆண்டு ஸ்கிராப் டெண்டர் எடுப்பதில் ஏற்பட்ட மோதலில் தனது கூட்டாளியான ஆற்காடு சுரேஷுடன் இணைந்து சின்னா மற்றும் ஸ்ரீதர் ஆகிய 2 வழக்கறிஞர்களை வெட்டி படுகொலை செய்தார். சீசிங் ராஜா மீது மொத்தம் 39 வழக்குகள் நிலுவையில் உள்ளது. பிரபல தாதா சம்பவ செந்திலுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பல ஆண்டுகளாக காலியாக உள்ள பல கோடி மதிப்புள்ள மனைகள் மற்றும் நிலங்களை அடையாளம் கண்டு, அந்த இடத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
மேலும், ரியல் எஸ்டேட் தொழிலில் தனக்கு போட்டியாக உள்ள தொழிலதிபர்களின் குழந்தைகள் மற்றும் மனைவிகளை கடத்தி சென்று துப்பாக்கி முனையில் மிரட்டி பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அபகரித்தும் வந்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் 2 கார் தொழிற்சாலைகள் அமைந்த பிறகு, ‘ஸ்கிராப்’ கழிவு பொருட்களை மொத்தமாக தொழில் நிறுவன உரிமையாளர்களை மிரட்டி டெண்டர் எடுத்து பல கோடி வருமானம் ஈட்டி வந்தார்.
வேளச்சேரியில் பார் உரிமையாளரை துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த சீசிங் ராஜாவை, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர் கண்ணன், இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி தலைமையிலான தனிப்படையினர் ஆந்திராவில் கடந்த செப்டம்பர் 23ம் தேதி கைது செய்து, சென்ைனக்கு அழைத்து வந்தனர். அப்போது, பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்ய சென்ற இடத்தில் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயன்ற போது, அடையாறு இன்ஸ்பெக்டர் இளங்கனி தற்பாதுகாப்புக்காக சீசிங் ராஜாவை துப்பாக்கியால் சுட்டு கொன்றார்.
இதற்கிடையே சீசிங் ராஜாவால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், தொழில் நிறுவன உரிமையாளர்கள் தங்களது சொத்துகளை அவரிடம் இருந்து மீட்டு தர வேண்டும் என்று தாம்பரம் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தனர். அதேநேரம் சென்னை பெருநகர காவல்துறையை போன்று, குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய தாம்பரம் மாநகர காவல்துறை முடிவு செய்தது.
தாம்பரம் அடுத்த சேலையூர் அகரம் தென் கிராமத்தில் 1 ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 2015ம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலமாக 773 பேருக்கு பட்டா போட்டு அபகரித்துள்ளனர். இந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என்றும் மீண்டும் இந்த ஒரு ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த 773 பேரிடம் இருந்து மீட்க அரசுக்கு புதிதாக வந்துள்ள கிராம நிர்வாகி அதிகாரி பரிந்துரை செய்துள்ளார். அதன்படி அரசு 1 ஏக்கர் நிலத்திற்கான பட்டாவை ரத்து செய்து உத்தரவிட்டது.
ஆனால் அந்த இடத்தை சீசிங் ராஜா அபகரித்தது தெரியவந்தது. தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக், உத்தரவுப்படி பள்ளிக்கரணை துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் 6 உதவி கமிஷனர்கள், 14 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 200 காவலர்கள், வருவாய் துறை அதிகாரிகள் உதவியுடன் சீசிங் ராஜாவுக்கு ெசாந்தமான வீடு மற்றும் உறவினர்கள் இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
குறிப்பாக, சென்னை கிழக்கு தாம்பரம் ராமகிருஷ்ணாபுரம் சுபாஷ் சந்திரபோஸ் தெருவில் தனது முதல் மனைவி ஜானகி (42) வசித்து வரும் வீடு, இரண்டாவது மனைவி ஜான்சி வீடு, மூன்றாவது மனைவி வனித்ரா வீடு, கோவிலம்பாக்கத்தில் ஓட்டல் நடத்தி வரும் அவரது கள்ளக்காதலி வீடு, சீசிங் ராஜாவின் நெருங்கிய உறவினர்கள், கூட்டாளிகளுக்கு சொந்தமான வேலையூர், மப்பேடு, கஸ்பாபுரம், மாடம்பாக்கம், கிண்டி பகுதிகளில் உள்ள வீடுகள் என மொத்தம் 14 இடங்களில் சோதனை நடந்தது.
அதில், முதல் மனைவி வசித்து வரும் ராமகிருஷ்ணாபுரம் சுபாஷ் சந்திரபோஸ் தெருவில் உள்ள வீட்டில் உதவி கமிஷனர் வைஷ்ணவி தலைமையிலான போலீசார் வருமாய் துறை அதிகாரிகளுடன் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்துப்பத்திரங்கள், ரியல் எஸ்டேட் தொடர்பான முக்கிய தகவல்கள், விற்பனை செய்யப்படாத நில வரைப்படங்கள், தனது மகள் சீர்த்தனா பிரியா மற்றும் மகன் தனுஷ் மீது பல இடங்களில் வாங்கி குவித்துள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் மற்ற 13 இடங்களிலும் இருந்து மொத்தம் 400க்கும் மேற்பட்ட பல கோடி மதிப்புள்ள சொத்துப்பத்திரங்கள், ஹார்டிஸ்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், நிலத்தை அபகரிக்க பயன்படுத்தப்பட்ட போலி ஆவணங்கள், அரசு முத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் ஹார்டிஸ்க்களை வருவாய் துறை அதிகாரிகளுடன் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அவரது சொத்துகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.
இந்த ஆய்வுக்கு பிறகு கூலிப்படை தலைவன் சீசிங் ராஜா யார் யார் சொத்துகளை மிரட்டி அபகரித்துள்ளார் என்பது தொடர்பான தகவல்கள் வெளியே வரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்ட சீசிங் ராஜாவுக்கு சொந்தமான 14 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் அவரது கூட்டாளிகள் மற்றும் ரவுடிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post என்கவுன்டர் செய்யப்பட்ட கூலிப்படை தலைவன் சீசிங் ராஜாவுக்கு சொந்தமான 14 இடங்களில் சோதனை appeared first on Dinakaran.