மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தை 16வது நிதி குழு ஆய்வு: தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு

சென்னை: மாமல்லபுரம் அருகே 150 எம்எல்டி கடல்நீரை குடிநீராக சுத்திகரிக்கும் நிலையத்தை, 16வது நிதி குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சிறப்பாக செயல்படுவதாக தமிழ்நாடு அரசை வெகுவாக பாராட்டினர். மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி பகுதியில் இசிஆர் சாலையொட்டி, 100 எம்எல்டி கடல்நீரை குடிநீராக சுத்திகரிக்கும் நிலையத்துக்கு கடந்த 2010ம் ஆண்டு அப்போதைய துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து, பணிகள் முடிக்கப்பட்டு சுத்திகரிப்பு நிலையம் கடந்த 2013ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இங்கு, நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு திருவான்மியூர், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு அனுப்பப்பட்டு வருகிறது. சென்னையின், குடிநீர் பற்றாக்குறை மற்றும் வறட்சியைப்போக்கும் வகையில் கடந்த 2003-04 ஆண்டு தொலைநோக்கு திட்டமான கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மீஞ்சூரில் காட்டுப்பள்ளி, கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலி என 2 இடங்களில் நாளொன்றுக்கு தலா 10 கோடி லிட்டர் கொள்திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு, சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் உள்ள 150 எம்எல்டி கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் 16வது நிதிக்குழுவின் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில் 11 பேர் கொண்ட குழு உறுப்பினர்கள் வந்து சுத்திகரிக்கப்பட்ட நீர்சேகரிப்பு தொட்டி, நீர்சேகரிப்பு தொட்டி, கசடுகளை கெட்டிப்படுத்தும் பிரிவு, நிர்வாக கட்டிடம், கடல் நீரை உட்கொள்ளும் கட்டமைப்பு, பண்டகசாலை, ஊடுருவி தொட்டி மற்றும் நடுநிலைபடுத்தும் தொட்டிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது, குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நாளொன்றுக்கு எவ்வளவு குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது. நிலையத்தின் செயல்பாடுகள், நிலையத்தின் விரிவாக்க பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் நிதிக் குழுவினர் கேட்டறிந்தனர். தொடர்ந்து, அக்குழுவினர் குடிநீர் நிலையம் முறையான கட்டமைப்புடன் பாதுகாப்பாக இயங்குவதாக தமிழ்நாடு அரசை வெகுவாக பாராட்டினர்.

ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோகத்துறை செயலாளர் கார்த்திகேயன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் வினய், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரிய செயல் இயக்குனர் சரவணன், செங்கல்பட்டு சப்-கலெக்டர் நாராயண சர்மா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

The post மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தை 16வது நிதி குழு ஆய்வு: தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: