பாகிஸ்தான் கப்பலை விரட்டிப் பிடித்து 7 பேரை மீட்ட இந்திய கடற்படை குஜராத் மீனவர்களுக்கு ஒரு நீதி… தமிழக மீனவர்களுக்கு ஒரு நீதியா? ஒன்றிய அரசு மீது ராமேஸ்வரம் மீனவர்கள் அதிருப்தி

ராமேஸ்வரம்: பாகிஸ்தான் கடற்படை கப்பலை விரட்டி பிடித்து குஜராத் மீனவர்களை மீட்கும் இந்திய கடற்படை, தமிழக மீனவர்களை மீட்கத் தவறுவது ஏன் என ராமேஸ்வரம் மீனவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். குஜராத் கடல் பகுதியில் நேற்று முன்தினம் 7 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இதனை அறிந்து அப்பகுதியில் ரோந்தில் இருந்த இந்திய கடலோர காவல் படையினர் பாகிஸ்தான் கப்பலை விரட்டி பிடித்து, இந்திய மீனவர்களை மீட்டனர்.

பாகிஸ்தான் கடற்படையை இந்திய கடலோர காவல் படை கப்பல் விரட்டி பிடிக்கும் வீடியோ செய்தி வலைத்தளங்களில் பரபரப்பாக ஓடியது. இது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்திய – இலங்கை குறுகிய கடல் எல்லையில் மீன்பிடிக்கும் ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டியதாக கூறி தொடர்ந்து சிறைபிடிக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது.

சில சமயங்களில் இந்திய கடல் எல்லைக்குள் இலங்கை கடற்படை அத்துமீறி நுழைந்து, மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடிப்பதை ராமேஸ்வரம் மீனவர்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்து ஆதாரங்களுடன் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். ஆனால் இதுவரை ராமேஸ்வரம் மீனவர்கள் பாதிக்கப்படும் போதும், சிறைபிடிக்கப்பட்ட போதும் இந்திய கடலோர காவல்படை அவர்களை மீட்டது இல்லை. இதுகுறித்து பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு தலைவர் சின்னத்தம்பி கூறுகையில், ‘‘இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே 300 நாட்டிக்கல் தூரம் கடல் எல்லை உள்ளது.

இவ்வளவு பெரிய எல்லையில் பாகிஸ்தான் கடற்படை கப்பலை இந்திய கடலோர காவல் படையினர் இரண்டு மணிநேரம் விரட்டி பிடித்து குஜராத் மீனவர்களை மீட்டுள்ளனர். ஆனால் வெறும் 18 நாட்டிக்கல் தூரத்தில் குறுகிய எல்லையாக இந்திய – இலங்கை கடல் எல்லை அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் இலங்கை கடற்படையின் சிறைபிடிப்புக்கு அஞ்சியே மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர். இந்திய அரசு இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்காதது ஏன்? குஜராத் மீனவர்கள் மீது மிகுந்த அக்கறை காட்டும் இந்திய அரசு தொடர்ந்து தமிழக மீனவர்களை புறக்கணிப்பதால் நாங்கள் இந்திய பிரஜைதானா என்கிற கேள்விக்கு ஆளாகியுள்ளோம்’’ என தெரிவித்தார்.

ஞானசீலன் விசைப்படகு மீனவ சங்க தலைவர் காரல் மார்க்ஸ் கூறுகையில், ‘‘இந்திய அரசு தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாகவே கருதுவது கிடையாது. வடமாநில மீனவர்களுக்கு மட்டுமே ஒன்றிய அரசு சலுகையும், அக்கறையும் காட்டி பாதுகாத்து வருகிறது. இந்திய – இலங்கை கடல் எல்லையில் ராமேஸ்வரம் மீனவர்கள் பலரை இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தி துடிக்க துடிக்க கொன்றது. ஒரு போதும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய கடலோர காவல் படை எங்களை பாதுகாத்தது இல்லை.

மிகக் குறுகிய கடல் எல்லையில் பாதிக்கப்படும் ராமேஸ்வரம் மீனவர்களின் பிரச்னையை உலகமே அறியும். இலங்கை அரசு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கி மீன்பிடித் தொழிலை அழிக்கும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதற்காக இந்திய அரசு இலங்கை அரசை ஒருமுறை கூட கண்டித்தது இல்லை. வடமாநில மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டால் உடனடியாக அக்கறை காட்டும் ஒன்றிய அரசு தமிழக மீனவர்கள் மீது காட்டாதது ஒட்டுமொத்த மீனவ சமூகத்தையும் புறக்கணிக்கும் செயலாக உள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்’’ என்றார்.

The post பாகிஸ்தான் கப்பலை விரட்டிப் பிடித்து 7 பேரை மீட்ட இந்திய கடற்படை குஜராத் மீனவர்களுக்கு ஒரு நீதி… தமிழக மீனவர்களுக்கு ஒரு நீதியா? ஒன்றிய அரசு மீது ராமேஸ்வரம் மீனவர்கள் அதிருப்தி appeared first on Dinakaran.

Related Stories: