*சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
திருப்பூர் : பல்லடம் அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில் தினமும் 100க்கும் மேற்பட்ட உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், செஞ்சேரிமலை பகுதியில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் முதியவர் ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நேற்று முன்தினம் மாலை அழைத்து வரப்பட்டார். அப்போது, அரசு மருத்துவமனை வளாகத்தில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது.
ஜெனரேட்டர் இருந்தும் போதிய பராமரிப்பு இல்லாததால் செல்போன் வெளிச்சத்தின் உதவியுடன் மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் சிகிச்சை அளிக்கும் சூழல் ஏற்பட்டது. காலில் ஏற்பட்ட காயம் என்பதால் வேறு ஏதும் பாதிப்பு இல்லை.
ஆனால், உயிருக்கு ஆபத்தான நேரங்களில் இதுபோன்று மின் வினியோகம் இல்லாமல் சிகிச்சை தடைபடும் பட்சத்தில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஜெனரேட்டர் உள்ளிட்டவைகளை உரிய முறையில் பராமரித்து நோயாளிகளுக்கு தடையின்றியும், சிரமம் இன்றியும் சிகிச்சை கிடைக்க பல்லடம் அரசு மருத்துவமனையில் உரிய வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மீரா கூறியதாவது:பல்லடம் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும்போது, திடீரென மின்சாரம் அந்த பகுதி முழுவதும் துண்டிக்கப்பட்டது. ஜெனரேட்டரை இயக்க பின்புறம் செல்ல வேண்டியதால் சற்று தாமதம் ஏற்பட்டது.
இருப்பினும், பாதிக்கப்பட்டவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டது. இதுபோல் வரும் காலங்களில் ஏற்படாத வகையில் ஜெனரேட்டர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் உரிய முறையில் பராமரித்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் நோயாளிகள் பாதிக்காதவாறு மாற்று ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
The post பல்லடம் அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை appeared first on Dinakaran.
