இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளிக்க டெல்லியில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் ராஜ்நாத் சிங் கூறியதாவது; ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாகவும் ராஜ்நாத் சிங் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி, தீவிரவாதிகளுக்கு எதிரான ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிக்கப்படும். சில அம்சங்கள் குறித்து பொதுவெளியில் விவாதிக்க முடியாது என ஒன்றிய அரசு கூறியதாக அவர் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆக்கப்பூர்வமாக விவாதம் நடைபெற்றது. அனைத்து தலைவர்களும் பொறுப்புடன் கருத்துகளை தெரிவித்தனர். இக்கட்டான சூழலில் எந்தவித அரசியலுக்கும் இடமில்லை என அரசியல் தலைவர்கள் கூறினர். சிந்தூர் நடவடிக்கையை செயல்படுத்திய ராணுவத்திற்கு அனைத்து தலைவர்களும் பாராட்டு தெரிவித்தனர் என அவர் கூறினார்.
The post ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் பலி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்! appeared first on Dinakaran.
