அடுத்த மாதம் நடக்கிறது ஆன்லைனில் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்: 1ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ்நாடு அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை, மேனிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான 2022-23ம் கல்வி ஆண்டு பொது மாறுதல் கவுன்சலிங் நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இந்த கவுன்சலிங்கில் பங்கேற்று விருப்ப மாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்கள் 27ம் தேதி முதல் தங்கள் விண்ணப்பங்களை எமிஸ் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யலாம். இந்த கல்வி ஆண்டில் மாறுதல் கோரும் ஆசிரியர்கள் தற்போது பணியாற்றும் பள்ளியில் ஓராண்டு பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. மாறுதல் கோரும் விண்ணப்பத்தில் முன்னுரிமை கோரி விண்ணப்பிக்கும் போது அதற்கான உரிய அலுவலரால் அளிக்கப்பட்ட ஆதாரத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தற்போது பணியாற்றும் பள்ளிக்கு மாறுதல் பெற்று வந்ததை ஆதாரத்துடன் இணைக்க வேண்டும். ஆசிரியர்கள் விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பங்களும் தலைமை ஆசிரியரின் ஒப்புதலுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை இன்று முதல் மே 1ம் தேதி வரை பதிவேற்றலாம். மே 31ம் தேதி நிலவரப்படி அனைத்து வகையான ஆசிரியர்களின் நிரப்பத் தகுந்த காலிப்பணியிட விவரங்களை இம்மாதம் 30ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆசிரியர் இன்றி உபரிக் காலிப் பணியிடத்தை எக்காரணம் கொண்டும் காலிப்பணியிடமாக கருதக்கூடாது. பொதுமாறுதல் கவுன்சலிங் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கும். முன்னுரிமைப் பட்டியல், காலிப்பணியிட விவரங்கள் மே 3ம் தேதி வெளியிடப்படும்.

முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் இருந்தால் மே 4ம் தேதி தெரிவிக்கலாம். மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப் பட்டியல்கள் மே 5ம் தேதி வெளியிடப்படும். மே 8ம் தேதி மாலைச் சுழற்சி மாறுதல் கவுன்சலிங் தொடங்கும். அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய்கோட்டத்துக்குள்)8ம் தேதி நடக்கும். நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கவுன்சலிங் 9ம் தேதி காலையில் நடக்கும். அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்), கடந்த ஆண்டுகளில் பணி நிரவல் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை மீண்டும் தாய் ஒன்றியத்துக்கு மீள ஈர்த்தல் ஆகியவை மே 10ம் தேதி நடக்கும். அரசு மற்றும் நகராட்சி முதுநிலை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் நிலை 1, உடற்கல்வி இயக்குநர் நிலை1, தொழிற்கல்வி ஆசிரியர்கள் மாறுதல்(வருவாய் மாவட்டத்துக்குள்), கடந்த ஆண்டுகளில் பணி நிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தாய் ஒன்றியத்துக்கே ஈர்த்தல் ஆகியவை மே 11ம் தேதி நடக்கும். இதன்படி படிப்படியாக ஆசிரியர்கள் நிலையில் கவுன்சலிங் மே 31ம் தேதி வரை நடக்கும்.

The post அடுத்த மாதம் நடக்கிறது ஆன்லைனில் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்: 1ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: