குன்னூர் : குன்னூரில் கழிப்பறை வசதி இல்லாமல் தவிக்கும் மேல் கடைவீதி பகுதி பொது மக்கள், 2 கழிப்பறைகள் இடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் புதிய கழிப்பறை பயன்பாட்டிற்கு வருமா? என எதிர்பார்க்கின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான மேல் கடைவீதியில் 500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், சுமார் 100 க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள், கோயில்கள், பள்ளி வாசல், தேவாலயங்கள் போன்ற வழிபாட்டு தலங்களும் உள்ளது.
மேலும் தினம் தோறும் அவ்வழியாக வங்கி மற்றும் அலுவலக பணிகளுக்கு செல்லும் பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என சுமார் 1000 திற்கும் மேற்பட்டோர் சென்று வரக்கூடிய பிரதான இடமாக இருந்து வருகிறது.
இப்படி பரபரப்பாக இருந்து வரும் மேல் கடை வீதியில் முற்றிலுமாக கழிப்பறை வசதி இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ரெய்லி காம்பவுண்ட் செல்லும் படிகட்டின் அருகே இருந்த பொதுகழிப்பறை இடிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த இடத்தில் இருசக்கர வாகனம் நிறுத்தப்படுகிறது. அதேபோல தந்தி மாரியம்மன் கோயில் கீழ்புறம் உள்ள கழிப்பறை சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதாக கூறி கடந்த 5 ஆண்டுக்கும் முன்பு இடிக்கப்பட்டது.
ஆனால் தற்போது வரை பொதுமக்களுக்கு எவ்வித பயன்பாட்டில் இல்லாத இடம் பூட்டு போட்டு அடைக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது தந்தி மாரியம்மன் கோயில் திருவிழா 40 நாட்கள் நடைபெற்று வரும் சூழலில் பக்தர்கள் கழிப்பிட வசதி இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் வணிக வளாகங்களில் பணியாற்றும் பெண்கள் மவுண்ட் ரோடு பகுதியில் உள்ள கட்டண கழிப்பறைக்கு சென்று தினம்தோறும் ரூ.50 வரை கட்டணம் செலுத்தி கழிப்பறையை பயன்படுத்தி வருகின்றனர். எனவே அப்பகுதியில் இடிக்கப்பட்ட கழிப்பறையை புதிதாக கட்டி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post குன்னூரில் கழிப்பறை வசதி இல்லாமல் தவிக்கும் மேல் கடைவீதி பொது மக்கள் appeared first on Dinakaran.
