×

காவல்துறையில் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்க மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோயில் நிலத்திற்கும், தமக்கும் பாதுகாப்பு வழங்கக்கோரி சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது தமிழ்நாட்டில் ஆர்டர்லி முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டுமென கடந்த 2022ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு முழுமையாக பின்பற்றப்பட்டதா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இதற்கு பதிலளிக்கும் வகையில், ஆர்டர்லிகளாக தற்போது யாரும் இல்லை என்று டிஜிபி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஆர்டர்லிகளாக யாரையும் பணியில் வைத்திருக்கக்கூடாது என்று டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியதை பாராட்டுகிறோம்.

அதேவேளையில் ஆர்டர்லிகளாக சீருடை காவலர்கள் பணியாற்றி வருவதாக செய்தி தாள்களிலும், பொதுத்தளத்திலும் தகவல்கள் வரும் நிலையில் ஆர்டர்லிகளாக யாரும் இல்லை என்று டிஜிபி கூறுவதை ஏற்க முடியவில்லை என்று தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ஆர்டர்லிகளாக பணியில் இருப்பது தொடர்பாக புகார் எதுவும் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இதையடுத்து, இந்த வழக்கில் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளரை தாமாக முன்வந்து இணைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, மாவட்ட அளவில் ஆர்டர்லிகளை பணியமர்த்த கூடாது என்று உள்துறை செயலாளர் டிஜிபிக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறி அது தொடர்பான அறிவுறுத்தல் உத்தரவை தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாட்டில் சிறை துறையில் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. சிறை துறை டிஜிபி இந்த பணியை சிறப்பாக மேற்கொண்டுள்ளார். அதேபோல் காவல்துறையிலும் ஆர்டர்லி முறை முற்றிலும் அகற்றப்பட வேண்டும். எனவே, மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். இந்த குழுவில் மாவட்ட வருவாய் அதிகாரி, எஸ்பி அந்தஸ்தில் உள்ள 2 அதிகாரிகள், மாநகரமாக இருந்தால் உதவி கமிஷனர்கள் ஆகியோர் இடம்பெற வேண்டும்.

இவர்கள் காவல்துறை அதிகாரிகள் ஆர்டர்லியை பயன்படுத்தினால் அது குறித்த தகவல்களை குழுவுக்கு தகவல் தர வேண்டும். அந்த தகவலை ஆய்வு செய்து கலெக்டர் உள்துறை செயலாளருக்கு அனுப்ப வேண்டும். அதன் அடிப்படையில் நடவடிக்கை குறித்த உள்துறை செயலாளர் அரசுக்கு அறிக்கை தர வேண்டும். இந்த குழுவை 2 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Court ,Tamil Nadu government ,Chennai ,Radhakrishnan ,Salem ,Chennai High Court ,Tamil Nadu… ,
× RELATED திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற...