×

முழு வீச்சில் பணியை தொடங்கியது தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு வாட்ஸ்அப், தொலைபேசி வழியாக 4 நாளில் மட்டும் 52,000 பரிந்துரைகள்: திமுக தலைமை தகவல்

சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலுக்கு திமுக சார்பில் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை அக்கட்சி தலைமை அமைத்தது. இந்த குழு தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக சமீபத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்தியது. இந்த குழு தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணிகளில் அதிரடியாக இறங்கியுள்ளது.

வெறும் வாக்குறுதிகளாக இல்லாமல், மக்களின் உண்மையான தேவைகளை உள்ளடக்கிய அறிக்கையை உருவாக்க திட்டமிட்டுள்ள திமுக, இதற்காக ஒரு பிரத்யேக மொபைல் செயலியையும் அறிமுகம் செய்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள இந்த செயலி மூலம், மாநிலத்தின் அனைத்து பகுதி மக்களும் தங்களது கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை நேரடியாக தெரிவிக்கலாம்.

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, இந்த செயலி வழியாக வரும் கருத்துகளை ஆய்வு செய்து தேர்தல் அறிக்கையில் சேர்க்கும். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களின் குரலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த முயற்சி, தேர்தல் களத்தில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. செயலி மட்டுமின்றி தொடர்புகொள்ள தொலைபேசி எண், வாட்ஸ்அப் எண், சமூக வலைத்தள பக்கங்கள், மின்னஞ்சல், இணையதளம், ஏஐ இணையதளம் ஆகியவற்றையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை இவைகளின் மூலம் தொடர்ந்து அனுப்பி வைத்து வருகின்றனர். என்ன மாதிரியான வாக்குறுதிகள் இடம்பெற வேண்டும் என்ற தங்களது கருத்துகளை பல தரப்பினரும் ஆர்வமுடன் திமுக தலைமைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கைக்காக கடந்த 4 நாளில் பெறப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, கடந்த 3ம்தேதி முதல் முதல் நேற்று முன்தினம் மாலை 6.30 மணி வரை தொலைபேசி வழியாக- 6,598, வாட்ஸ் அப் வழியாக-29,036, மின்னஞ்சல் வழியாக -1046, இணையதளம் வழியாக-8266, QR scan வழியாக- 1394, AI வலைவாசல் வழியாக-5680 என மொத்தம் தொடங்கிய 4 நாளில் இதுவரை மொத்தம் 52,080 பரிந்துரைகளும், கோரிக்கைகளும் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* அறிவிக்கப்படாத அரிய திட்டங்கள்
தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாமலேயே பல்வேறு முன்னோடித் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார். மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி கல்வி, புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன், மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திறனறித் தேர்வுத் திட்டம், மக்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் (நம்மைக் காக்கும் 48), கலைஞரின் கனவு இல்லம், மற்றும் மகளிர் பெயரில் சொத்து பதிவு செய்தால் முத்திரை கட்டணத்தில் 1% சலுகை உள்ளிட்ட அறிவிக்கப்படாத அரிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* 2021 தேர்தல் வாக்குறுதிகளின் நிலை என்ன?
கடந்த 2021 தேர்தலில் திமுக அளித்த 505 வாக்குறுதிகளில், இதுவரை 404 வாக்குறுதிகள் (80%) நிறைவேற்றப்பட்டுள்ளன. 364 வாக்குறுதிகள் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன. 40 அறிவிப்புகள் அரசின் பரிசீலனையில் உள்ளன. ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட 37 வாக்குறுதிகள் நிலுவையில் உள்ளன. உள்ளூர் போராட்டங்கள் மற்றும் தேவைப்படாத சூழல் காரணமாக 64 திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Tags : DMK ,Chennai ,general secretary ,Kanimozhi MP ,
× RELATED திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற...