- தமிழ்
- தமிழ்நாடு
- முதல் அமைச்சர்
- காசி முத்து மானிக்கம்
- சென்னை
- திமுக வர்த்தகர்கள்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: அரசு ஊழியர்களின் இரண்டாம் தாயாக தமிழக முதல்வர் விளங்குகிறார் என்று திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் தெரிவித்துள்ளார். திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் வெளியிட்ட அறிக்கை: அரசு ஊழியர்களுக்கு பென்சன் தருவதற்காக கடந்த நான்கு ஆண்டு காலமாக நிதிகளை சேமித்து அதற்காக தளபதி பட்ட பாடு பெரும்பாடு. தாயிற்கு அடுத்த கோயிலாக, இரண்டாம் தாயாக தளபதி அரசு ஊழியர்களின் நெஞ்சில் நிறைந்து விட்டார்.
எடப்பாடி, ‘‘தேர்தல் என்பதற்காக ஸ்டாலின் தூங்கிவிட்டு, இப்போதுதான் ஞானோதயம் பிறந்தது போல புதுப்புது திட்டமாக அறிவிக்கிறார்’’ என்கிறார். தமிழக அரசிடம், 2021 தேர்தல் நேரத்தில் கொரானாவுக்காக குடும்பத்திற்கு 5 ஆயிரம் திமுக தலைவர் கொடுக்க சொன்னபோது, எடப்பாடி ரூ.1000ம் தான் தந்தார். மீதி ரூ.4000த்தை முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற உடன் அறிவித்தாரே தவிர, தேர்தல் நேரத்திலா அறிவித்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, நகைகடன் தள்ளுபடி, மகளிர்குழு கடன் 2780 கோடி கடன் தள்ளுபடி, விடியல் பயணம், காலை உணவு திட்டம் எல்லாம் தேர்தல் நேரத்திலா அறிவித்தோம். விடுதலை சிறுத்தை திருமாவை, பொது தொகுதியில் திமுக கட்சி நிற்க வைக்குமா என சீமான் கேட்கிறார். திருப்போரூர் பொது தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் திமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்றதும், பொது தொகுதியான நாகப்பட்டினத்தில், விடுதலை சிறுத்தைகள், திமுக ஆதரவுடன் வென்றதும் சீமானுக்கு வசதியாக மறந்து விட்டது போல.
அன்புமணி, ‘‘பென்சன் திட்டம் ஏமாற்றுத் திட்டம்’’ என்கிறார். தமிழக அரசின் பென்சன் திட்டத்தால் எதுவுமே பயன் இல்லை என்றால் எதற்காக ஆண்டிற்கு 13,000 கோடி தமிழக அரசுக்கு இழப்பு வருகிறது. போராடிய ஜாக்டோ ஜியோ இருகை நீட்டி வரவேற்கின்றனர். அன்புமணியும், பழனிசாமியும் 10.5 இட ஒதுக்கீட்டில் கடைசி நேரத்தில் வன்னியர்களை ஏமாற்றியது போல அல்ல இது.
பொங்கல் பரிசுத் தொகை ரூ. 5,000 கொடுக்க வேண்டும் என எடப்பாடி போன்றவர்கள் கேட்ட போது, அது அதிகம் என சொல்லாத அன்புமணி இன்று ரூ.3,000 ஒதுக்கப்படும் என்றவுடன் குதிப்பது ஏன். 20 ஆண்டுகளுக்கு முன் பென்ஷன் திட்டத்தை அதிமுக அரசு ஏன் நிறுத்தியது என்றோ, நிறுத்தியதை கண்டித்தோ ஒரு வார்த்தை சொல்லாத அன்புமணி, பென்ஷன் திட்டத்தை கொண்டு வந்த புண்ணியவான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை குறை கூறி அறிக்கை விடுகிறார்.
அன்புமணி திருடியவனை திட்டாமல், திருட்டை மீட்டெடுத்த திமுகவை சீண்டிப்பார்க்கிறார். தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்திட்டத்தை பாராட்டாத அமைப்பே இல்லை, பாராட்டாவிட்டால் அது அமைப்பே இல்லை.
