×

சட்டமன்ற ஆவணங்கள் கணினிமயமாக்கம் செய்யப்பட்ட பிரத்யேக இணையதளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: சட்டமன்றப் பேரவை மற்றும் சட்ட மேலவை நிகழ்வுகளின் பதிவுகள் கணினிமயமாக்கம் செய்யப்பட்டு, அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணையதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். 2021ம் ஆண்டு சட்டமன்றப் பேரவையின் நூறாண்டு நிறைவையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவுரையின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சரால் 13-8-2021 அன்று தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், 1921ம் ஆண்டு முதல் நடந்த சட்டமன்றப் பேரவை மற்றும் சட்ட மேலவை நிகழ்வுகளின் பதிவுகள் கணினிமயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சட்டமன்ற ஆவணங்கள் முறையே சட்டமன்றப் பேரவை மற்றும் சட்ட மேலவையின் நடவடிக்கை குறிப்பு புத்தகங்கள், குழுக்களின் அறிக்கைகள், பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள், வெளியீடுகள், புகைப்படங்கள், செய்தித் துணுக்குகள், காணொலி துணுக்குகள் உள்ளிட்ட அனைத்தையும் நவீன முறையில் கணினிமயமாக்கம் செய்யும் பணி தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மேற்பார்வையின்கீழ் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் நடந்து வருகிறது.

தற்போது முதற்கட்டமாக, 1952ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையிலான சட்டமன்ற ஆவணங்கள் கணினிமயமாக்கம் செய்யப்பட்டு, அதற்கென வடிவமைக்கப்பட்ட பிரத்யேக tnlasdigital.tn.gov.in என்ற இணையதளத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், பொது மக்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயனடையும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த இணையதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ,சபாநாயகர் மு.அப்பாவு, அமைச்சர் துரைமுருகன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி, அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post சட்டமன்ற ஆவணங்கள் கணினிமயமாக்கம் செய்யப்பட்ட பிரத்யேக இணையதளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Legislative Assembly ,Legislative Council ,Tamil Nadu Legislative Assembly… ,Dinakaran ,
× RELATED ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு ஏன்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்