×

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கொடியேற்றத்துடன் பங்குனி பெருவிழா தொடங்கியது

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வருடாந்திர பங்குனி பெருவிழாஇன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சென்னையில் உள்ள சிவன் கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது கபாலீஸ்வரர் கோயில். இங்குள்ள சிவனின் பெயர் கபாலீசுவரர் என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது. இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. இந்து தொன்மவியல்படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோயில் அமைந்துள்ளப் பகுதியும் மயிலாப்பூர் என வழங்குவதாகவும் கூறப்படுகிறது. பிற்காலத் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ள இக்கோயில், நாற்புறமும் மாடவீதிகளையும், அழகிய கோபுரங்கள், திருக்குளம் முதலியவற்றையும் கொண்டு விளங்குகின்றது.

இன்றைய கோயில் அண்மைக் காலத்தில் புதுப்பிக்கப்பட்டதாயினும், கபாலீசுவரர் கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது. மயிலாப்பூர் கடற்கரையோரத்தில் துறைமுகப் பட்டினமாக விளங்கிய காலத்தில் இக்கோயில் புகழ் பெற்று விளங்கியதாகத் தெரிகிறது.இந்த கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும். அதுமட்டுமின்றி இந்த கோயிலில் 10 நாட்கள் நடக்கும் பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.  இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தின்போதும் அறுபத்து மூவர் திருவிழாவின் போது, கோயிலின் 4 மாட வீதிகளில் உலா வரும் தேரோட்டத்தை காண இலட்சக்கணக்கான பொதுமக்கள் சென்னை மட்டுமின்றி, பல்வேறு ஊர்களில் இருந்து வருவார்கள்.

இந்நிலையில் இந்த கோயிலில் வருடாந்திர பங்குனி பெருவிழா மற்றும் அறுபத்து மூவர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த திருவிழா வரும் 12-ம்தேதி வரை நடைபெற உள்ளது. பங்குனி பெருவிழாவையொட்டி நேற்று நடந்த கிராம தேவதை பூஜையில் இரவு 10 மணிக்கு அம்மை மயில் வடிவில் சிவபூஜை காட்சியும், புன்னைமர வாகனம், கற்பகமர வாகனம், வேங்கைமர வாகன வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதனையடுத்து 5-ம்தேதி அதிகாரநந்தி எழுந்தருளும் நிகழ்வும், வரும் 9ம் தேதி தேர்திருவிழாவும், 10ம்தேதியன்று அறுபத்து மூவர் திருவிழாவும், 12-ம்தேதி திருக்கல்யாணம் உற்சவமும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து வரும் 13-ம்தேதி உமா மகேஷ்வர் தரிசனமும், பந்தம் பறி உற்சவமும் நடைபெற்று, 14-ம்தேதி திருமுழுக்குடன் பங்குனி பெருவிழாவானது நிறைவடைகிறது.

10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கோயில் நிர்வாகமும், காவல்துறையும் செய்து வருகிறது. அதுமட்டுமின்றி திருவிழாவையொட்டி இன்று முதல் 12-ம்தேதி வரை அந்த பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட நாட்களில் அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கோயிலை நோக்கி வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது என்றும், வாகன ஓட்டுநர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

The post மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கொடியேற்றத்துடன் பங்குனி பெருவிழா தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Panguni festival ,Mylapore Kapaleeswarar temple ,Chennai ,Panguni ,Kapaleeswarar temple ,Shiva ,Kapaleeswarar ,Udanurai Amman ,Karpagambal ,Dinakaran ,
× RELATED ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு ஏன்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்