×

பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விருதுநகர், பிப்.5: பாஜ அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய பாஜ அரசானது, சமீபத்தில் 2025-26க்கான நிதி நிலை அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், வேலையில்லா திண்டாட்டத்தை போக்கவும் எவ்விதமான திட்டமும் இல்லை. மேலும், பெரும் பணக்காரர்களுக்கு ஆதரவாகவும், ஏழை, எளிய மக்களுக்கு எதிராகவும் பட்ஜெட் உள்ளது. கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு நிதி கடந்த ஆண்டை விட குறைக்கப்பட்டுள்ளது.

காப்பீட்டுத் துறையில் 100சதவீத அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மானிடேஷன் என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை தனியாருக்கு விற்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து பிஎஸ்என்எல்இயு சார்பில் விருதுநகரில் பொது மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் இளமாறன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் துவக்கி வைத்தார். மாநில உதவித் தலைவர் சமுத்திரக்கனி விளக்கிப் பேசினார். மேலும் இதில், கருப்பசாமி, ரவீந்திரன், குருசாமி, வளர்மங்கை உட்பட பலர் பங்கேற்றனர்.

The post பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : BSNL ,Union government ,Virudhunagar ,BJP government ,Parliament ,Dinakaran ,
× RELATED கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி தஞ்சம்