திருப்பூர், டிச.25: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி சட்டவார விழா கடந்த 17ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வரக்கூடிய நிலையில் நேற்று திருப்பூரில் ஆட்சி மொழி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருப்பூர் குமரன் சாலையில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கி குமரன் சாலை, பூங்கா சாலை வழியாக மீண்டும் கோட்டாட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது.
இப்பேரணியை திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவப்பிரகாஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் மற்றும் பணியாளர்கள், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பேரணியில் மாணவ- மாணவிகள் தமிழ் மரபு சார்ந்த சிலம்பாட்டம், தப்பாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகளுடன், தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்த பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
