×

தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் மாநிலமாக உள்ளதால் தமிழ்நாடுதான் முதலீட்டாளர்களின் முதல் முகவரி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொழில் முனைவோர், தொழிலாளர்கள் என்று எல்லோருக்கும் நம்பிக்கை அளிக்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இதனால், ‘தமிழ்நாடுதான் முதலீட்டாளர்களின் முதல் முகவரி’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் சென்னையில் நேற்று நடந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயலாக்க மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

திராவிட மாடல் என்றால், வளர்ச்சிக்கான மாடல்! திராவிட மாடல் என்றால் ரிசல்ட் கொடுக்கக்கூடிய மாடல்! திராவிட மாடல் என்றால், மக்கள் நலனுக்காக இருக்கக்கூடிய மாடல்! இதை எல்லாம் உலகுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய மாநாடுதான், இந்த செயலாக்க மாநாடு. அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டின் வளர்ச்சியை பொறுத்து சொல்ல வேண்டும் என்று சொன்னால், பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு சிலருக்கு எங்களுடைய செயலின் மூலம் பதில் சொல்லும் மாநாடு தான் இந்த செயலாக்க மாநாடு.

தொழில்துறை அமைச்சர் இங்கே சொன்ன ஒவ்வொரு டேட்டாவும், எங்களை விமர்சனம் செய்தவர்களுக்கான பதில் அதுதான். இங்கே அவர் சொன்ன ஒவ்வொரு நம்பரும், எங்கள் டீமுக்கான ஐந்து வருட கடுமையான உழைப்பிற்கான நம்பர். தொழில்துறையில் நாங்கள் செய்திருக்கக்கூடிய ரெக்கார்டை அடித்துச் சொல்கிறேன் அடுத்து, நாங்கள் வந்துதான் பீட் செய்யப்போகிறோம். இது உறுதி.

இன்றைக்கு இந்த மாநாட்டில் மட்டும் 52 கம்பெனிகளுடைய திறப்பு விழா. 71 கம்பெனிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா. 2 புதிய கம்பெனிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தம் என சாதனை சொல்கின்ற மாநாடாக இது நடக்கிறது. கடந்த 2021 முதல் நாங்கள் செய்த பணிகளை எல்லாம் மேடை போட்டு சொல்லி இருக்கிறோம். ஏனென்றால், இந்தியாவிலேயே இதுபோன்ற ஒரு மாநாடு எங்கும் நடந்ததில்லை.

ஒரு தொழில் நிறுவனமோ, தொழிற்சாலையோ, தங்களுக்கான மாநிலத்தை எப்படி தேர்ந்தெடுப்பார்கள் என்றால், அந்த மாநிலம் தங்களுக்கான வாய்ப்புகளை பெரிய அளவில் உருவாக்கி தருமா? சொன்ன நேரத்தில், தங்களால் உற்பத்தியை தொடங்க முடியுமா என்று பார்த்துதான், ஒரு மாநிலத்திற்கு வருவார்கள். அப்படி, தொழில் நிறுவனங்கள் – தொழிற்சாலைகள் – தொழில் முனைவோர் – தொழிலாளர்கள் என்று எல்லோருக்கும் நம்பிக்கை அளிக்கக்கூடிய மாநிலமாக, நம்முடைய தமிழ்நாடு இருக்கிறது.

எதனால், இந்த வெற்றி சாத்தியமாகிறது என்று கேட்டீர்கள் என்றால், எங்களை பொறுத்தவரைக்கும், முதலீட்டாளர் மாநாடு நடத்திவிட்டோம்; புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுவிட்டோம்; நியூஸில் தலைப்பு செய்தியாக வந்துவிட்டது என்று திருப்தி அடைந்திட மாட்டோம். போட்ட ஒப்பந்தம் – நிறுவனமாக திறப்பு விழா கண்டு, நம்முடைய இளைஞர்கள் கைக்கு, ஆபர் லெட்டர் வந்து சேரும் வரைக்கும் பார்த்து பார்த்து, எல்லாவற்றையும் நாங்கள் உறுதி செய்கிறோம். இங்கே சமூகநீதியும் நிலை பெறவேண்டும், தொழில் வளர்ச்சியும் உறுதி செய்யப்பட வேண்டும்.

அப்போதுதான், ‘எல்லார்க்கும் எல்லாம்’ – ‘அனைத்து மாவட்ட வளர்ச்சி’ என்ற இலக்கை அடைய முடியும் என்பதில் நாங்கள் மிக கவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இதை நான் பெருமையோடு சொல்கிறேன்… ‘தமிழ்நாடுதான், முதலீட்டாளர்களின் முதல் முகவரி’ என்று அனைத்து புள்ளி விவரங்களும் சொல்ல ஆரம்பித்துவிட்டது. இன்றைக்கு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நாட்டின் சராசரியைவிட அதிகம். தமிழ்நாட்டின் வளர்ச்சி 11.19 சதவிகிதம்.

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், கடந்த ஆண்டு, இந்தியாவின் உற்பத்தி துறை வளர்ச்சி 4.5 சதவிகிதம். அதேசமயம், தமிழ்நாட்டின் வளர்ச்சி அதைவிட மூன்று மடங்கு அதிகமாக, 14.7 சதவிகிதம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில், தமிழ்நாட்டின் share மட்டும் 41 விழுக்காடு. இதை மேலும் அதிகரிக்கக்கூடிய வகையில், இன்னும் பல செயல் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

திராவிட மாடல் ஆட்சியின் மற்றுமொரு சிறப்பம்சம் என்பது, காழ்ப்புணர்ச்சி அரசியல் செய்யாமல், மாநில நலனை முன்னிறுத்தி, அரசியல் செய்வது. தொழில்துறை என்று மட்டுமல்லாமல், அனைத்து துறைகளிலும், கடந்த ஆட்சியில், போடப்பட்ட ஒப்பந்தங்களாக இருந்தாலும், மாநில வளர்ச்சிக்கான திட்டங்களை கிடப்பில் போடாமல், எந்த பாகுபாடும் பார்க்காமல், ஒத்துழைப்பு கொடுத்து நிறைவேற்றியிருக்கிறோம்.

இந்த நேரத்தில், நான் உங்களிடம் வைக்கின்ற வேண்டுகோள் எல்லாம், சாதனைகளை செய்யும் எங்கள் திராவிட மாடலுடன் சேர்ந்து, உங்களுடைய பயணத்தை தொடருங்கள். புதுத் திட்டம் தொடங்க வேண்டும் என்றால், உங்களுக்கு ஐடியா வந்தாலே, அதை தமிழ்நாட்டில்தான் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் வந்து உங்களுக்கு சேரும்.

உங்களுக்கு எப்படி டார்கெட் இருக்கிறதோ, அது மாதிரி எங்களுக்கும், 2030ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையவேண்டும் என்கின்ற டார்கெட் இருக்கிறது. எனவே, அதிகமான முதலீட்டாளர்களை தமிழ்நாட்டை நோக்கி அழைத்துக் கொண்டு வாருங்கள். உங்கள் டார்கெட்டையும், எங்கள் டார்கெட்டையும் அடைய, இணைந்தே பயணிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Tamil Nadu ,Mu. K. Stalin ,Chennai ,Chief Minister ,K. Stalin ,
× RELATED மடப்புரம் காவலாளி வழக்கில் கூடுதல்...