×

மடப்புரம் காவலாளி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் டிஎஸ்பி உள்பட 4 போலீசார் பிப்.25ம் தேதி ஆஜராக உத்தரவு

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் டிஎஸ்பி உள்பட 4 காவல் துறையினர் கூடுதல் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நான்கு பேரும் பிப். 25ம் தேதி ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (28), போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். இவ்வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. தனிப்படை காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கரமணிகண்டன், டிரைவர் ராமச்சந்திரன் ஆகிய 6 பேர் கைதாயினர். இவ்வழக்கு விசாரணை மதுரை ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இவ்வழக்கில் சிபிஐ தரப்பில் நேற்று கூடுதல் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் 7வது குற்றவாளியாகவும், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் 8வதாகவும், எஸ்ஐ சிவக்குமார் 9வதாகவும், ஏட்டு இளையராஜா 10வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்கள் மீது குற்றச்சதி, தவறாக சிறை வைத்தல், ஆதாரங்களை மறைத்தல் மற்றும் பொய் தகவல் கொடுத்து குற்றத்தை மறைத்தல், அரசு மற்றும் நீதிமன்ற ஆவணங்களை போலியாக தயாரித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்த கூடுதல் குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொண்ட நீதிபதி கே.செல்வபாண்டி, வழக்கில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 4 பேரும் பிப். 25ம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

Tags : Matapuram ,DSP ,Madurai ,Madapuram ,Ajit Kumar ,Madapuram Bhadrakaliamman Temple ,Sivaganga District, Tirupuwanam ,
× RELATED எரிவாயு பைப் லைனில் திடீரென...