தேனி, டிச.25: பெரியகுளம் அருகே பெருமாள்புரத்தில் பட்டாசு வெடித்த விவகாரத்தில் வீடு புகுந்து பெண்ணை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பெருமாள்புரத்தில் இபி காலனி தெருவில் குடியிருப்பவர் குமார் மனைவி மகேஸ்வரி(35). கடந்த கார்த்திகை நாளன்று இவரும், இவரது உறவினர்களும் இதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்ற ஆதித்யா என்பவரது வீட்டின் முன்பு பட்டாசு வெடித்துள்ளனர்.
இதில் கருப்புசாமி தரப்புக்கும் மகேஸ்வரி குடும்பத்தினருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இது தொடர்பாக கருப்பசாமி என்ற ஆதித்யா (20) மற்றும் தெய்வேந்திரபுரத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் (20) ஆகிய இருவரும் மகேஸ்வரி வீட்டுக்குள் சென்று அவரை தாக்கினர். இதில் மகேஸ்வரிக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் பெரியகுளம் போலீசார் கருப்பசாமி என்ற ஆதித்யா மற்றும் பிரவீன் குமார் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
