மாணவ, மாணவிகளின் தற்கொலைகளை தடுக்க பள்ளிகளில் நல்வாழ்வு குழு: ஒன்றிய அரசு புதிய வழிகாட்டுதல்

புதுடெல்லி: பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் தற்கொலை தடுக்க நல்வாழ்வு குழு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் ஒன்றிய கல்வி அமைச்சகம் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துள்ளது. பள்ளி மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ராஜஸ்தானின் கோட்டா நகரில் நீட் பயிற்சி மையங்களில் சமீபத்தில் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெற்றோர்களை கவலையில் ஆழ்த்தியது. இந்நிலையில், பள்ளி மாணவ, மாணவிகளிடம் தற்கொலை எண்ணத்தை தடுக்க, ஒன்றிய கல்வி அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து வருகிறது. தற்போது இதன் வரைவு அறி க்கை தயாராகி வருகிறது.

அதில், ஒவ்வொரு குழந்தையும் முக்கியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்கொலை எண்ணம் கொண்ட மாணவர்கள் அடையாளம் காணப்பட்டால், அதை உணர்வுப்பூர்வமாக அணுக வேண்டும், விஷயத்தின் தீவிரத்தை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற மாணவர்களுடன் ஒப்பிடுவது, தோல்வியை நிரந்தரமானதாக கருதுவது, கல்வி திறன் மட்டுமே வெற்றியின் ஒரே அளவீடாக பேசுவது போன்ற தவறான எண்ணத்திற்கு வழிவகுக்கும் கருத்துக்களை நிராகரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. காலி வகுப்பறைகளை மூட வேண்டும், பள்ளி வளாகத்தின் இருள் சூழ்ந்த பகுதிகளில் விளக்கு வசதிகள் செய்ய வேண்டும், தோட்டம் உள்ளிட்ட பகுதிகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பள்ளி முதல்வர் தலைமையில் நல்வாழ்வு குழு ஒன்றை அமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மாணவர்களை கண்காணித்து நெருக்கடிமான சூழ்நிலைகளை கையாள்வதில் கவனம் செலுத்த வேண்டும். மனநலம் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதோடு இந்த முயற்சியில் அனைத்து பங்குதாரர்களையும் இணைக்கச் செய்யும் வகையில், பள்ளிகள், பெற்றோர்கள் மற்றும் சமூகம் இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.

The post மாணவ, மாணவிகளின் தற்கொலைகளை தடுக்க பள்ளிகளில் நல்வாழ்வு குழு: ஒன்றிய அரசு புதிய வழிகாட்டுதல் appeared first on Dinakaran.

Related Stories: