சென்னையில் மூன்று வழித்தடங்களை உள்ளடக்கி மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2020ம் ஆண்டே 2ம் கட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், ஒன்றிய அரசு தனது பங்கு நிதியாக ஒரு பைசா கூட வழங்கவில்லை. ஒன்றிய அரசு தனது பங்கை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால், அது தமிழக அரசு திட்டம் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி வந்தார். இந்நிலையில் கடந்த 29ம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்துக்கான நிதியை ஒதுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து இருந்தார். இதைதொடர்ந்து கடந்த 4ம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில், ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பிலான சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால், ஒன்றிய அரசு விரைவில் நிதிஉதவி வழங்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சென்னை 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சகம் ஒரு புதிய விளக்கத்தை அளித்துள்ளது. அதில், “சென்னை 2ம் கட்ட மெட்ரோ பணிகளுக்கான மதிப்பீட்டு செலவில் சுமார் 65 சதவீதத்தை ஒன்றிய அரசு வழங்குகிறது.
மேலும் இந்த நிதி உதவியில் ரூ.33,593 கோடி கடனும், சமபங்கு மற்றும் சார்நிலைக் கடனான ரூ.7,425 கோடியும் அடங்கும். இருதரப்பு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து ரூ.32,548 கோடியை கடனாக நிதி திரட்ட ஒன்றிய அரசு உதவி செய்கிறது. எஞ்சிய 35 சதவீத மதிப்பீட்டு செலவுக்கு மாநில அரசு நிதியுதவி செய்யும். மேலும் பன்னாட்டு, மேம்பாட்டு முகமைகளிடம் இருந்து பெறப்படும் கடன்கள் மாநில அரசுக்கானதாக இல்லாமல் ஒன்றிய அரசுக்கானதாகக் கருதப்படும். அதேபோன்று கடன் தொகை மாநில அரசுக்கும் மாநில அரசின் பட்ஜெட்டிலிருந்து மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு செல்லும் தற்போதைய வழிமுறைக்கு மாறாக, ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் இருந்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு நேரடியாக வழங்கப்படும். கடனை திருப்பி செலுத்தும் பொறுப்பானது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தை சார்ந்தது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் திருப்பி செலுத்த முடியாத நிலையில், அந்த ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு ஏதுவாக அந்த நிறுவனத்திற்கு நிதி உதவி வழங்குவது மாநில அரசின் கடமையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்ட செயலாக்க முகமையாக மாநில அரசு இருக்கும் இடத்தில் இனி ஒன்றிய வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மூலமே கடன் தொகை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த வழிமுறையில் ஒன்றிய அரசு மாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒன்றிய அரசின் இந்த புதிய விளக்கத்தின் அடிப்படையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான கடன்கள் மாநில அரசுக்கானது அல்ல என்று தெரிய வருகிறது.
The post சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கு ஒன்றிய அரசு கடன் வாங்கி தரும்: தமிழக அரசு தான் திருப்பி செலுத்த வேண்டும் ஒன்றிய நிதியமைச்சகம் புதிய விளக்கம் appeared first on Dinakaran.