திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் அன்ன வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த மலையப்ப சுவாமி: நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடிய சீடர்கள்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவம் 2வது நாளில் சரஸ்வதி அலங்காரத்தில், அன்ன வாகனத்தில் எழுந்தருளி மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை சீடர்கள் பாடினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முக்கோடி தேவதைகளையும் அழைத்து வேதமந்திரங்களோடு பிரமோற்சவ கொடியேற்றம் நேற்று முன்தினம் தொடங்கியது. பிரமோற்சவத்தின் 2வது நாளான நேற்று காலை 5 தலைகளுடன் கூடிய சிறிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி முரளி கிருஷ்ணர் அலங்காரத்தில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் இரவு பெரிய சேஷ வாகனத்தை ஆதிசேஷனாகவும், நேற்று காலை சிறிய சேஷ வாகனத்தை வாசுகியாகவும் நினைத்து சுவாமி முரளி கிருஷ்ணா அலங்காரத்தில் வீதிஉலா வந்ததை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மனமுருகி ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி முழக்கமிட்டு வேண்டினர்.

சுவாமி வீதிஉலாவில் கோயில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர் தலைமையில் சீடர்கள் நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாடியபடி வந்தனர். இதில் பல்வேறு மாநிலத்தில் இருந்து வந்த பக்தர்கள் கோலாட்டம் ஆடியும் சுவாமியின் பல்வேறு அவதாரங்களை குறிக்கும் விதமாக வேடம் அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். பிரமோற்சவத்தின் 2வது நாளான நேற்றிரவு சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களின் கோவிந்தா பக்தி முழக்கத்திற்கு மத்தியில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமிக்கு கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். அன்ன பறவை பால், தண்ணீரை பிரிப்பது போல் பக்தர்களின் தீய எண்ணங்களை அகற்றி நல்ல எண்ணங்களை சுவாமி தனது பக்தர்களுக்கு அருள் புரிவதாக நம்பிக்கை. இதனால் திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.

 

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் அன்ன வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்த மலையப்ப சுவாமி: நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடிய சீடர்கள் appeared first on Dinakaran.

Related Stories: