சபரிமலையில் மண்டல காலத்தில் தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் வரும் மண்டல காலத்தில் தினசரி ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இவ்வருட மண்டலகால பூஜைகள் நவம்பர் 16ம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு 15ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். இந்நிலையில் வரும் மண்டல, மகரவிளக்கு காலத்தில் பக்தர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. பக்தர்களுக்கு சிரமமின்றி தரிசனம் செய்து திரும்புவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கடந்த வருடம் பக்தர்கள் வருகை அதிகரித்ததாலும், கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீசார் தவறியதாலும் பக்தர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். எனவே பக்தர்களின் சிரமத்தை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள அரசுக்கும், திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினசரி ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் உடனடி முன்பதிவு கவுண்டர்கள் தேவையில்லை என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இதுதொடர்பாக நேற்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. வரும் மண்டல காலத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்றும், தினசரி பக்தர்கள் எண்ணிக்கையை 80 ஆயிரமாக கட்டுப்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போதே செல்லும் வழியையும் பக்தர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இதன்மூலம் நெரிசல் குறைவான பாதையில் பக்தர்கள் செல்ல முடியும். வனப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்படும். கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் வாகனப் போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கான இடங்களை தேர்வு செய்து பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும். நிலக்கல், எருமேலியில் கூடுதல் வாகனங்களை நிறுத்த வசதி ஏற்படுத்தப்படும். இவ்வாறு இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

 

The post சபரிமலையில் மண்டல காலத்தில் தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி: ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் appeared first on Dinakaran.

Related Stories: