நாடு முழுவதும் மக்கள் உற்சாகம் களைகட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: கோயில், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு, தமிழகம் முழுவதும் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு

சென்னை: ஆங்கில புத்தாண்டை (2024) வரவேற்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் கோயில்கள், தேவாலயங்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். வீடுகள், நட்சத்திர ஓட்டல்கள், கடற்கரைகளில் நண்பர்கள், உறவினர்களுடன் திரண்டு உற்சாகமாக கொண்டாடினர். அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க மாநிலம் முழுவதும் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். 2024 ஆங்கில புத்தாண்டு நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. புதிய புத்தாண்டை பொதுமக்கள் வரவேற்க தமிழ்நாடு முழுவதும் கோயில்கள், தேவாலயங்கள், பூங்காக்கள், கடற்கரை, சுற்றுலா தளங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இரவு 10மணி முதல் திரண்டனர்.

பிறகு நள்ளிரவு 11.59 மணிக்கு பொதுமக்கள் தயாராக வைத்திருந்த கேக்கை வெட்டி நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கொண்டாடினர்.புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சென்னை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், ரிசாட்டுகள், கேளிக்கை விடுதிகள், விருந்தினர் மாளிகைகள், பண்ணை வீடுகளில் இனிப்புகள் மற்றும் மதுவிருந்து, ஆட்டம் பாட்டத்துடன் பொதுமக்கள் அவரவர் வசதிக்கு ஏற்றபடி கொண்டாடி மகிழ்ந்தனர். புத்தாண்டை வரவேற்று பொதுமக்கள் நேற்று இரவு முதல் அதிகாலை வரை வழிபாட்டு தலங்களில் குவிந்தனர்.

பாதுகாப்பு வழங்கும் வகையில் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் மேற்பார்வையில் மாநகர கமிஷனர்கள், 4 மண்டல ஐஜிக்கள், டிஐஜிக்கள் மற்றும் 38 மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் மாநிலம் முழுவதும் 1.20 லட்சம் போலீசார் நேற்று முன்தினம் முதல் இன்று அதிகாலை வரை பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். காவல்துறையின் சிறப்பான பணி காரணமாக பெரிய அளவில் எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

பொதுமக்கள் அதிகம் கூடிய இடங்களில் போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணி மேற்கொண்டனர். கடற்கரை பகுதிகளில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் யாரும் கடலுக்கு அருகே செல்லாதபடி போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். முக்கிய வழிபாட்டு தலங்கள், தேவாலயங்களில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிகளவில் கூடியதால், அப்பகுதிகளில் திருட்டு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ‘டிரோன்’ கேமராக்கள் பயன்படுத்தப்பட்டது. மேலும், கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாநகரங்களில் பைக் ரேஸ், பைக் சாகசங்களில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்து வாகன சோதனை மூலம் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நேற்று இரவு 11 மணி முதல் இன்று அதிகாலை வரை மாநிலம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் தற்காலிக வாகன சோதனை மையம் அமைத்து சோதனை மேற்கொண்டனர். அப்போது மது குடித்துவிட்டு பைக் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. அதிக போதையில் இருந்த நபர்களை போலீசார் தற்காலிக முகாம்களில் தங்க வைத்து இன்று அதிகாலை போதை தெளிந்த பிறகு அனுப்பி வைத்தனர்.

சென்னையை பொருத்தவரை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்ேதார் தலைமையில் கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, அஸ்ரா கார்க், போக்குவரத்து கூடுதலை கமிஷனர் சுதாகர் மேற்பார்வையில் இணை கமிஷனர்கள் மற்றும் 12 துணை கமிஷனர்கள் நேரடி கண்காணிப்பில் 18 ஆயிரம் போலீசார், 1500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். விபத்தில்லா புத்தாண்டு கொண்டாடும் வகையில் சென்னை மாநகர காவல் எல்லையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் 420 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது. கோயில், தேவாலயங்கள் என 10 வழிபாட்டு தலங்கள் பகுதியில் டிரோன் மூலம் கண்காணிக்கப்பட்டது.

புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்ற முக்கிய பகுதிகளான மெரினா, அடையார், கிண்டி, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் நெடுஞ்சாலை, ஜிஎஸ்டி சாலைகளில் பைக் ரேசில் ஈடுபட்டவர்கள் மற்றும் பைக் சாகசத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க 25 சாலை பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சிறப்பாக பணியாற்றி பைக் ரேஸ் மற்றும் வாகன சாகசத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், ரிசாட்டுகள், பண்ணை வீடுகளில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறதா என்று போலீசார் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தனர்.

மெரினா மற்றும் பெசன்ட் நகர் எலியர்ஸ் கடற்கரை பகுதிகளில் வழக்கத்தை விட இந்த ஆண்டு மக்கள் தங்களது குடும்பத்துடன் மற்றும் வாலிபர்கள், இளம்பெண்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். அவர்களை கண்காணிக்க, போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி துணை கமிஷனர் தலைமையில் தற்காலிக காவல் உதவி மையம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் மூலம் கூட்டத்தை போலீசார் டிரோன் மூலம் கண்காணித்தனர். மெரினா, பெசன்ட் நகர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் கடலில் இறங்கி குளிக்கும் நபர்களை கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் குதிரைப்படைகள் மூலம் கண்காணிக்கப்பட்டது.

தடையை மீறி யாரேனும் கடல் நீரில் சிக்கினால் அவர்களை மீட்க, உயிர்காக்கும் படையினர் தயார் நிலையில் இருந்தனர். மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மருத்துவ குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடற்கரை பகுதியில் புத்தாண்டு என்ற பெயரில் இளம்பெண்களிடம் கேக்குகள் வழங்கி தொந்தரவு செய்த, வாலிபர்கள் சிலரை பெண் காவலர்களின் சிறப்பு படையினர், அடையாளம் கண்டு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டனர். இதேபோல நாடு முழுவதும் சுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்து புத்தாண்டை வரவேற்றனர். உலக நாடுகளிலும் உற்சாகத்துடன் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

* ஜனாதிபதி வாழ்த்து
ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், ‘புத்தாண்டின் வருகை, புதிய தீர்மானங்கள் மற்றும் இலக்குகளை நிர்ணயித்து முன்னேறுவதற்கான சந்தர்ப்பமாகும். 2024ம் ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பை கொண்டு வரட்டும். நாட்டின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பங்களிப்போம். புத்தாண்டை வரவேற்போம். வளமான சமூகத்தையும் தேசத்தையும் கட்டியெழுப்ப உறுதிமொழி எடுப்போம். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வாழும் இந்தியர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்’ என கூறி உள்ளார்.

* முதலில் கொண்டாடிய நியூசிலாந்து
உலகில் முதலாவதாக நியூசிலாந்தில் 2024 புத்தாண்டு இந்திய நேரப்படி நேற்று மாலை 4.30 மணி அளவில் பிறந்தது. அங்குள்ள ஆக்லாந்து நகரில் புகழ்பெற்ற ஸ்கை டவரில் கண்கவர் வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பொதுமக்கள் புத்தாண்டை வரவேற்று கொண்டாடினர். அடுத்த 2 மணி நேரத்தில் ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு பிறந்தது. சிட்னி நகரின் ஹார்பர் பாலத்தில் வண்ணமயமான வாண வேடிக்கை மற்றும் லைட் ஷோ நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து உலகெங்கிலும் புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும் அனைத்து நகரங்களிலும் பொதுமக்கள் ஆங்கில புத்தாண்டை கொண்டாடி வரவேற்றனர்.

The post நாடு முழுவதும் மக்கள் உற்சாகம் களைகட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: கோயில், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு, தமிழகம் முழுவதும் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Related Stories: