மாடு பூட்டிய மரச்செக்கு… இயற்கை முறையில் காய்கறி…

தனித்துவ ரூட்டில் தர்மபுரி உழவர்

‘‘நமது முன்னோர் மரச்செக்கில் மாடுகளைக்கட்டி எண்ணெய் பிழிந்தே சமையலுக்கு பயன்படுத்தி வந்தனர். காலம் காலமாக இந்த முறைதான் நடைமுறையில் இருந்தது. இது மிக ஆரோக்கியமான முறை. செக்கில் ஆட்டிய எண்ணெயில் கலப்படம் இருக்காது. நுண்ணுயிர்கள் உயிர்ப்புடன் இருக்கும். இதில் இருந்து கிடைக்கும் எண்ணெய் வகைகள் சமையலுக்கு கூடுதல் சுவை தரும். புண்ணாக்கு கூட தூய்மையாக இருக்கும். இதை உணவுகளில் கூட பயன்படுத்துவார்கள். மாடுகளுக்கு நல்ல தீவனம். மாட்டுச்செக்குகள் மெல்ல மெல்ல மறைந்தன. இப்போது பாக்கெட் எண்ணெய்கள்தான் நமது சமையலில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன. மாட்டு செக்குகள் மறைவெய்தியதில் இருந்துதான் மனித சமூகம் இதயநோய் உள்ளிட்ட பல்ேவறு நோய்களுக்கு பலிகடாவாகி இருக்கிறது’’ என அதிரடியாக பேசுகிறார் அருள்.

சென்னையில் குடும்பத்துடன் வசிக்கும் அருள் கொரோனா ஊரடங்கின்போது தனது சொந்த ஊரான தர்மபுரி அருகே உள்ள மணியம்பாடிக்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கு தனக்கு சொந்தமான வயலில் விவசாயம் செய்ததோடு, மரச்செக்கு அமைத்து மாடுகளைக் கொண்டு எண்ணெய் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் இயற்கை முறையில் கத்திரி, வெண்டை, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளையும், சப்போட்டா, கொய்யா, அத்தி போன்ற பழ மரங்களையும் பயிர் செய்து வருகிறார். இதனால் அப்பகுதி மக்கள் மத்தியில் மரச்செக்கு எண்ணைய், பாரம்பரிய விவசாயம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இதனால் மேலும் பல விசயங்கள் செய்ய வேண்டும் என திட்டமிட்டு வரும் அருளை சந்தித்தோம்… பாரம்பரிய விவசாயக்குடும்பம்தான் எங்களுடையது. எங்களது நிலம் மேட்டு நிலம். இதில் எங்களது முன்னோர் சாமை, வரகு, தினை, சோளம், கம்பு போன்ற சிறுதானியங்களை பயிரிடுவார்கள். பின்னர் நிலக்கடலை போன்ற பயிர்களை சாகுபடி செய்ய ஆரம்பித்தார்கள். நான் பிஇ படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் இன்ஜினியராக பணியாற்றுகிறேன். எனது மனைவி பானுமதி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார். மகன் சித்தார்த் 6ம் வகுப்பு படிக்கிறான். கடந்த 2019ம் ஆண்டில் கொரோனாவுக்காக ஊரடங்கு அறிவித்தபோது சொந்த ஊருக்கு சென்றிருந்தோம். அங்கு எங்களுக்கு 2 ஏக்கர் நிலம் இருக்கு. அதில் ஒரு பகுதியில் வீடு கட்டினோம். வீட்டைச்சுற்றி மா, மாதுளை, சப்போட்டா, நாவல், லிச்சி, வாட்டர் ஆப்பிள், எலந்தப்பழம், கொய்யா, செவ்வாழை, எலுமிச்சை உள்ளிட்ட பழவகை செடிகள் நட்டு வளர்த்தேன். அவற்றில் தற்போது பழங்கள் காய்த்து பலன் தருகின்றன. அவை அனைத்தையும் ரசாயனம் கலக்காமல் இயற்கை முறையில் வளர்க்கிறேன். இதனால் வீட்டைச்சுற்றி பழ மரங்கள் நிறைந்து பசுமையாக இருக்கிறது.

நிலத்தில் வெண்டை, தக்காளி, கத்திரி, பீர்க்கு, பாகல் உள்ளிட்ட காய்கறி பயிர்களை பயிரிட்டேன். மேலும் நிலக்கடலை, எள் போன்றவற்றையும் பயிர் செய்கிறோம். இப்படி விவசாயத்தில் ஏதாவது செய்துகொண்டே இருந்தோம். திடீரென இயற்கையாக காய்கறிகள், பழங்கள் உற்பத்தி செய்கிறோம் ஆனால் எண்ணெய் விசயத்தில் நாம் பலரும் விழிப்புணர்வு இல்லாமலே இருக்கிறோமே என நினைத்தேன். இதனால் நாமே ஏன் கலப்படம் இல்லாத, ஆரோக்கியமான எண்ணெயை உருவாக்கக்கூடாது என நினைத்து செயல்பாட்டில் இறங்கி விட்டேன். இதற்காக பல இடங்களுக்கு சென்று மூத்தோர்களிடம் யோசனை கேட்டறிந்து, 6 அடி உயரத்திற்கு மரச்செக்கு அமைத்தேன். மரச்செக்கு அமைக்க மட்டுமே ஒன்றே முக்கால் லட்சம் செலவானது. மரச்செக்கு வாங்கிவிட்டோம். இதில் மாடுகளைக்கட்டித்தான் எண்ணெய் பிழிய வேண்டும் என உறுதியாக இருந்தேன். இதற்காக ₹1.50 லட்சத்திற்கு ஒரு ஜோடி காங்கேயம் காளைகளை வாங்கினேன். மொத்தம் ₹4.50 லட்சம் செலவில் செக்கு அமைக்கப்பட்டது. எங்கள் வயலில் நிலக்கடலை, எள், தேங்காய் உள்ளிட்டவற்றைக்கொண்டு எண்ணைய் பிழிகிறோம். மேலும் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளிடம் இருந்தும் மேற்கண்டவற்றை வாங்கி எண்ணெய் பிழிகிறோம்.

ஒரு நாளைக்கு 2 முறை எண்ணெய் பிழிகிறோம். ஒரு முறை எண்ணெய் பிழிவதற்கு 3 மணி நேரம் ஆகும். அதில் 20 லிட்டர் எண்ணெய் வித்துகளை நிரப்பலாம். நிலக்கடலையாக இருந்தால் 8 லிட்டர் எண்ணெய் கிடைக்கும். எள் என்றால் 7 லிட்டர். தேங்காயில் 10 லிட்டர் எண்ணெய் கிடைக்கும். இந்த 3 மணி நேரமும் மாடுகளுடன் 2 மனிதர்கள் கூடவே நடக்க வேண்டும். இல்லையென்றால் மாடு நடக்காது. இதுபோல் 2 முறைதான் ஒருநாளைக்கு
எண்ணெய் பிழிய முடியும். ஒரு கிலோ நாட்டுக்கடலை வாங்க ரூ.120 தேவைப்படுகிறது. அதை அடைத்து வைக்கும் பாட்டிலுக்கு ரூ.10 தேவைப்படுகிறது. இரண்டரை கிலோ நிலக்கடலையில் 1 லிட்டர் எண்ணெய் கிடைக்கும். 1 லிட்டர் எண்ணெய் பிழிய சாதாரணமாக ரூ.320 செலவாகும். இதனால் ஒரிஜினல் மரச்செக்கு எண்ணெய்கள் சற்று விலை அதிகம்தான். ஆனால் இது தூய்மையானது என்பதை மக்கள் உணர வேண்டும். மரச்செக்கை, காளைகள் மூலம் மெதுவாக இயக்குவதால் தேங்காய், நிலக்கடலை, எள் ஆகியவை சூடாவதில்லை. ஆனால் இயந்திர தயாரிப்பில் எண்ணெய் வித்து பொருட்களில் உள்ள சத்துக்களையும், தயாரிப்பாளர்கள் வடிகட்டி விடுவார்கள். மரச்செக்கு எண்ணெய், நிறம் குறைவாகவே இருந்தாலும், நல்ல வாசனையுடன் ஓராண்டு வரை கெட்டு போகாமல் இருக்கும். இந்த எண்ணெயில் சமைக்கும் உணவுகள், உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும். மற்ற தேங்காய் எண்ணெய்களில் பெரும்பாலும் சல்பர் கலந்திருக்கும்.

இதை பயன்படுத்தினால் புற்றுநோய் வரும் ஆபத்து உள்ளது. தலையில் தடவி வர முடி கொட்டும். ஆனால் மாடுகளைக்கொண்டு தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெயில் அந்த ஆபத்தில்லை. இதில் நுண்ணுயிர்ச்சத்துகள் அப்படியே கிடைக்கின்றன. நிலக்கடலையில் பல உயிர்ச்சத்துகள் நிரம்பியிருக்கின்றன. இதைச்சாப்பிட்டால் வம்சம் விருத்தியாகும் என்பார்கள். நிலக்கடலை வயலில் குடியிருக்கும் எலிகள் குட்டிகளை அதிகமாக ஈனும். அதற்கு காரணம் இதுதான். அதேபோல எள்ளில் இருந்து கிடைக்கும் நல்லெண்ணெய் பல நன்மைகள் தர வல்லது. இதனால்தான் நமது முன்னோர் இதை நல்ல எண்ணைய் என்றார்கள். நாங்கள் தயாரிக்கும் எண்ணெயை அதிக விலைக்குக் கூட விற்பதில்லை. மக்களுக்கு விழிப்புணர்வு வந்தால் போதும் என செயல்படுகிறோம். காய்கறிகளும் அப்படித்தான். வாரம் ஒருமுறை சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு போவேன். அங்கிருந்து எண்ணெய், காய்கறிகளை எங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவேன். எஞ்சியவற்றை மற்றவர்களுக்கு கொடுப்பேன். இதில் ெபரிய அளவில் வருமானம் இல்லைதான். ஆனால் தற்போது எங்களின் செயல்பாடு மூலம் பாரம்பரிய உணவுகள் குறித்த விழிப்புணர்வு பலருக்கு வந்திருக்கிறது. அது மகிழ்ச்சிதான்’’
என்கிறார் அருள்.
தொடர்புக்கு:
அருள் – 91762 86862

The post மாடு பூட்டிய மரச்செக்கு… இயற்கை முறையில் காய்கறி… appeared first on Dinakaran.

Related Stories: