புதுச்சேரியில் கூட்டணி முறிகிறதா? அதிருப்தி பாஜ எம்எல்ஏக்கள் 8 பேர் திடீர் டெல்லி பயணம்

புதுச்சேரி: புதுச்சேரியில் தேஜ கூட்டணியில் சலசலப்பு நிலவிவரும் நிலையில் பாஜ அதிருப்தி எம்எல்ஏக்கள் 8 பேர் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர். புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜ வேட்பாளர் நமச்சிவாயம் தோல்வியடைந்ததால் தேஜ கூட்டணிக்குள் புகைச்சல் கிளம்பி உள்ளது. இதனிடையே பாஜ மற்றும் ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் 7 பேர் சில தினங்களுக்கு முன்பு கவர்னர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததோடு, பாஜ அமைச்சர்களை நீக்க வலியுறுத்தினர். சுயேச்சை எம்எல்ஏ அங்காளன் பேசிய ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில் கல்யாணசுந்தரம் (காலாப்பட்டு), ஜான்குமார் (காமராஜர் நகர்), விவிலியன் ரிச்சர்ட் (நெல்லித்தோப்பு), பாஜக ஆதரவு சுயேச்சைகள் அங்காளன் (திருபுவனை), சிவசங்கர் (உழவர்கரை), கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் (ஏனாம்), நியமன எம்எல்ஏ வெங்கடேசன் ஆகிய 8 பேர் நேற்று இரவு திடீரென டெல்லி சென்றுள்ளனர். அவர்கள் 2, 3 நாள் அங்கு தங்கி பாஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா, அமித்ஷா ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை, மாநில பாஜ தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான செல்வகணபதி மற்றும் சபாநாயகர் செல்வம் ஆகியோர் நேற்று மதியம் அவரது அறையில் தனியாக சந்தித்து 1 மணி நேரம் பேசி உள்ளனர். அதிருப்தி எம்எல்ஏக்கள் டெல்லி பயணம் குறித்து முதல்வருடன் விவாதித்த 2 பேரும், இப்பிரச்னைக்கு சுமூகமாக தீர்வு காண ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post புதுச்சேரியில் கூட்டணி முறிகிறதா? அதிருப்தி பாஜ எம்எல்ஏக்கள் 8 பேர் திடீர் டெல்லி பயணம் appeared first on Dinakaran.

Related Stories: