அண்ணாமலை 6 மாதம் வெளிநாடு பயணம் தமிழக பாஜவுக்கு புதிய தலைவர் நியமனமா? பதவியை பிடிக்க கட்சிக்குள் கடும் போட்டி

சென்னை: அண்ணாமலை வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் பட்சத்தில், தமிழக பாஜவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தலைவர் பதவியை பிடிக்க கட்சிக்குள் கடும் போட்டி நிலவுகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச அரசியல் படிப்புக்காக இந்தியாவில் இருந்து 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் பாஜ தலைவர் அண்ணாமலையும் ஒருவர். அதாவது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் செவனிங் உதவித் தொகை மூலம் சர்வதேச அரசியல் என்ற தலைப்பிலான படிப்பை பயில அண்ணாமலை மூன்று மாதங்கள் இங்கிலாந்து செல்ல உள்ளார். அவரின் இந்த படிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. அங்கு தங்கிப் படிப்பதற்கான செலவை பல்கலைக்கழகமே ஏற்றுள்ளது. இதனால், அவர் 6 மாதம் அங்கேயே தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து மேற்படிப்பிற்காக லண்டன் செல்ல அனுமதி கேட்டு பாஜ மேலிடத்திற்கு அண்ணாமலை கடிதம் எழுதியிருந்தார். தற்போது வரை அவரது கடிதம் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் அண்ணாமலை படிப்பிற்காக லண்டன் சென்றால், பொறுப்பு தலைவர் நியமிக்கப்படுவாரா அல்லது அண்ணாமலை மாற்றப்பட்டு புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால், மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜ கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதிமுகவுடனான கூட்டணியை முறித்ததால்தான் இப்படி தோல்வியடைய நேரிட்டது.

கூட்டணி அமைத்திருந்தால் சில இடங்களை பிடித்து இருக்கலாம் என்று பாஜவில் உள்ள தலைவர்களான தமிழிசை சவுந்தரராஜன் போன்றவர்கள் வெளிப்படையாக கருத்து தெரிவித்தனர். இதனால், கட்சிக்குள் அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும், தமிழிசை ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் உருவானது. ஒருவரை ஒருவர் சமூக வலைத்தளங்களில் கடுமையாக தரக்குறைவான வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, திருச்சி சூர்யா, கல்யாணராமன் போன்றவர்களின் பதவிகள் பறிக்கப்பட்டன. நீக்கப்பட்ட திருச்சி சூர்யா அண்ணாமலை குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றார்.

இந்நிலையில், அண்ணாமலை வெளிநாடு சென்றால் கட்சி பணி கடுமையாக பாதிக்கப்படும். கட்சியை யார் வழிநடத்துவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், பொறுப்பு தலைவர் நியமிக்கப்படலாம் அல்லது அண்ணாமலை மாற்றப்படலாம் என்று கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த சூழ்நிலையில் அண்மையில் தமிழிசை சவுந்தரராஜன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். இதனால் அவர் மீண்டும் தலைவராக நியமிக்கப்பட போகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேநேரம், தலைவர் மாற்றப்படும் சமயத்தில் தலைவர் பதவியை பிடிக்க கட்சிக்குள் கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதனால், கட்சி மேலிடம் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்ற பரபரப்பு தமிழக பாஜவினரிடையே ஏற்பட்டுள்ளது.

The post அண்ணாமலை 6 மாதம் வெளிநாடு பயணம் தமிழக பாஜவுக்கு புதிய தலைவர் நியமனமா? பதவியை பிடிக்க கட்சிக்குள் கடும் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: