நீட் முறைகேடு குறித்து மக்களவையில் விவாதிக்க அனுமதி மறுப்பு. சபாநாயகர் முடிவை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு!

டெல்லி: நீட் தேர்வு முறைகேடு குறித்து மக்களவையில் விவாதிக்க அனுமதி மறுத்த சபாநாயகர் முடிவை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்றத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீட் தேர்வு முறைகேடுகள், மத்திய விசாரணை அமைப்புகளை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்துவதை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நீட் தேர்வு முறைகேடு குறித்து மக்களவையில் விவாதிக்க கோரி காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளது. மக்களவையில் இன்று விவாதம் நடத்த வலியுறுத்தி கே.சி.வேணுகோபால், மாணிக்கம் தாகூர் ஆகியோர் நோட்டீஸ் அளித்தனர்.

இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பின் நாடாளுமன்ற இரு அவைகளும் கூடின. அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து நீட் முறைகேடு குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் தொடங்கப்பட்டது. அப்போது சபாநாயகர் முடிவை கண்டித்து ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இறுதியாக அவர்கள் அவையில் இருந்து வெளிநடப்பும் செய்தனர். இதனிடையே வெளிநடப்பு செய்வதற்கு முன் நீட் முறைகேடு தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில், “நாடாளுமன்றத்திற்கு நீட் முறைகேடு விவகாரம் முக்கியமானது என மாணவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்ப விரும்புகிறோம். எனவே, நாடாளுமன்றம் இதனை விவாதிக்க வேண்டும்” இவ்வாறு தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த ராஜ்நாத் சிங், குடியரசுத் தலைவர் உரை மீதான பதிலுரை உள்ளதால் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.

The post நீட் முறைகேடு குறித்து மக்களவையில் விவாதிக்க அனுமதி மறுப்பு. சபாநாயகர் முடிவை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு! appeared first on Dinakaran.

Related Stories: