தேசிய, சர்வதேச போட்டிகளில் வென்ற 589 பேருக்கு ரூ.14 கோடி ஊக்கத்தொகை: அமைச்சர் உதயநிதி வழங்கினார்

சென்னை: தேசிய, சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டுகளில் வென்று பதக்கம் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 589 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.14 கோடி உயரிய ஊக்கத்தொகையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில் 589 பேருக்கும் நீண்ட நேரம் நின்றபடியே காசோலைகளை வழங்கி பாராட்டினார். விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல்வேறு சாதனைகளை படைத்து வரும் உங்களை தமிழ் நாடு அரசு எப்போதும் பாராட்டி ஊக்கப்படுத்தி வருகிறது.

முதல் அமைச்சர் அறிவுறுத்தலின்படி, பதக்கங்களை வென்ற 589 பேருக்கு சுமார் 14 கோடி ரூபாய் உயரிய ஊக்கத் தொகை வழங்கி உள்ளோம். முதல் அமைச்சரின் நம்பிக்கைக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கும் உரியவர்கள் நீங்கள். உங்களில் பலர் எஸ்டிஏடி விடுதிகளில் தங்கிப் படிப்பவர்கள் என்பது எங்களுக்கு கூடுதல் பெருமை. ஒலிம்பிக் போட்டிக்கு பஞ்சாப், அரியானாவை அடுத்து அதிக வீரர்களை அனுப்பியுள்ள மாநிலமாக தமிழ்நாடு இருப்பது நமக்கு பெருமை. ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்க தமிழகத்தை சேர்ந்த 17 பேருக்கு தலா ரூ.7 லட்சம் என மொத்தம் ரூ.1.19 கோடி ஊக்கத் தொகையை முதல் அமைச்சர் வழங்கி, வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற மனு பாக்கர், துப்பாக்கி பழுதடைந்ததால் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனதை எண்ணி கண்ணீர் விட்டார். அன்று பதக்கத்தை தவறவிட்டாலும் அவர் கலங்கவில்லை. கடினமாக பயிற்சி செய்து, இன்று பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2 பதக்கங்களை வென்றுள்ளார். அவரைப் போலவே ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற இலக்கு உள்ளவர்களாக உங்களைப் பார்க்கிறேன். இந்தியாவின் பதக்கப்பட்டியலில் உங்கள் பெயரும் ஒருநாள் வரும் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது. இந்த அரசுக்கும் இருக்கிறது. அதற்கு தமிழ்நாடு அரசும், விளையாட்டு மேம்பாட்டு துறையும் என்றும் துணை நிற்கும்.

உதவி தேவைப்படுவோர் எஸ்டிஏடி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 100 பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவித்தேன். அதன்படி முதல் கட்டமாக 50 பேருக்கு விரைவில் பணி நியமன ஆணையை முதல் அமைச்சர் வழங்க இருக்கிறார். நாம் எல்லோரும் இணைந்து தமிழ்நாட்டை இந்திய விளையாட்டுத்துறையின் தலைநகராக மாற்றுவோம். இவ்வாறு அமைச்சர் உதயநிதி பேசினார். விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, இந்திய கால்பந்து அணி வீராங்கனை இந்துமதி கதிரேசன், வாள் வீச்சு வீராங்கனை பவானிதேவி ஆகியோர் பங்கேற்றனர்.

The post தேசிய, சர்வதேச போட்டிகளில் வென்ற 589 பேருக்கு ரூ.14 கோடி ஊக்கத்தொகை: அமைச்சர் உதயநிதி வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: