நாகப்பட்டினம் கீரைக்கொல்லை தெருவில் பாலம் அமைக்க வேண்டி ரயில் மறியல் போராட்டம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் கீரைக்கொல்லை தெருவில் ரயில்வே கீழ் பாலம் அமைக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் கீரைக்கொல்லை தெருவில் ரயில்வே கேட் உள்ளது. இந்த பகுதியை சுற்றியுள்ள குடியிருப்புகளின் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இதன் அருகே நாகப்பட்டினம் ரயில்வே ஸ்டேசன் உள்ளதால் பெரும்பாலான நேரங்களில் கீரைக்கொல்லை தெரு ரயில்வேகேட் மூடியே கிடக்கும். சரக்கு ரயில் சென்று வரும்போது, சிக்னல் கோளாறு காரணமாக நின்றால் குறைந்தது 2 மணி நேரத்துக்கு மேலாக கேட் மூடியே கிடக்கும். இதனால் அங்குள்ள காமராஜர் நகர், டாடா நகர், சேவா பாரதி, சால்ட் ரோடு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். எனவே அந்த பகுதியில் ரயில்வே கீழ் பாலம் அமைக்க கோரினர்.

இந்நிலையில் நேற்று வேளாங்கண்ணியில் இருந்து நாகப்பட்டினம் வந்த பயணிகள் ரயிலுக்காக கீரைக்கொல்லை தெரு ரயில்வே கேட் மூடப்பட்டது. நீண்ட நேரமாகியும் கேட் திறக்கப்படாததால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். இதையடுத்து பல மணி நேரம் காத்திருந்து பொறுமை இழந்த வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டின் கீழ் பகுதியில் நுழைந்து மோட்டார் சைக்கிளில் சென்றனர். இதை பார்த்த ரயில்வே போலீசார் எச்சரித்து மோட்டார் சைக்கிளில் சாவியை பிடுங்கினர். இதில் ஆத்திரமடைந்த பொது மக்களுக்கும், ரயில் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் அந்த வழியாக வந்த பயணிகள் ரயிலை மறித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த இருப்பு பாதை போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவசரத்துக்கு ஆம்புலன்ஸ் கூட குறிப்பிட்ட நேரத்துக்கு அந்த பகுதியை கடந்து செல்ல முடியாததால் தவிர்க்க முடியாத உயிர் இழப்பு ஏற்படுகிறது. அவசரத்துக்கு ரயில்வே கேட்டை கடந்து சென்றால் பொது மக்களை ரயில்வே ஊழியர்கள் அவதூறாக பேசுகிறார். எனவே பொதுமக்களின் சிரமத்திற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த கீரைக்கொல்லைதெரு ரயில்வே கேட்டில் கீழ்பாக்கம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

The post நாகப்பட்டினம் கீரைக்கொல்லை தெருவில் பாலம் அமைக்க வேண்டி ரயில் மறியல் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: