மூணாறு அருகே தேயிலை எஸ்டேட்டில் புலி நடமாட்டம்: தொழிலாளர்கள் ஓட்டம்


மூணாறு: மூணாறு அருகே, தேயிலை எஸ்டேட்டில் புலி நடமாட்டத்தை கண்ட தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே, தனியார் கம்பெனிக்கு சொந்தமான அப்பர் சூரியநெல்லி தேயிலை எஸ்டேட் உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று வழக்கமாக தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றபோது, தேயிலை தோட்டத்தில் இருந்த பாறை மேல் புலி ஒன்று ஹாயாக அமர்ந்திருந்தது. இதைப் பார்த்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். புலியும் அவர்களைப் பார்த்து கண்ணிமைக்கும் நேரத்தில் வனப்பகுதிக்குள் ஓடியது.

இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே, தேயிலை தோட்டத்தின் நடுவே புலி அமர்ந்திருக்கும் காட்சியை தொழிலாளர் ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது வைரலாக பரவி வருகிறது. இந்த பகுதியில் ஏராளமான பசு மாடுகளை புலி தாக்கி கொன்றுள்ளது. குடியிருப்பு பகுதியில் பகல் நேரங்களில் கூட தொழிலாளர்கள், குழந்தைகள் வெளியில் வருவதற்கு அச்சப்படுகின்றனர். எனவே, வனத்துறை அதிகாரிகள் புலியை பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்கு விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மூணாறு அருகே தேயிலை எஸ்டேட்டில் புலி நடமாட்டம்: தொழிலாளர்கள் ஓட்டம் appeared first on Dinakaran.

Related Stories: