6 மணி நேரத்தில் 30 செ.மீ பெய்தது: மும்பையை புரட்டி போட்ட மழை

மும்பை: மும்பை நகரின் பல பகுதிகளிலும் மழை விடிய விடிய வெளுத்து வாங்கியது. நகர் முழுவதும் வெள்ளக்காடாகின. மும்பையில் கடந்த மாத துவக்கத்தில் பருவமழை தொடங்கியது. இதன்பிறகு தொடர்ந்து மழைப்பொழிவு காணப்பட்டாலும், விட்டு விட்டு பெய்ததால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. சில இடங்களில் மரங்கள் சாய்ந்தது, சுவர் இடிந்த சம்பவங்கள் நடந்தன. இந்நிலையில்நேற்று முன்தினம் இரவு தொடங்கி மும்பை நகரில் மழை விடிய விடிய வெளுத்து வாங்கியது.

நகரின் பல பகுதிகளிலும் நள்ளிரவுக்கு மேல் தொடங்கி நேற்று காலை 7 மணி வரை தொடர்ந்து 6 மணி நேரத்தில் 30 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது. இதைத் தொடர்ந்து நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. பின்னர் நேற்று காலை 8.30 தொடங்கி 9 மணி நேரத்தில் கொலாபாவில் 10.18 செ.மீ மழையும் மும்பை புறநகரில் 1.48 செ.மீ மழையும் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. மும்பையை புரட்டிப்போட்ட மழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ளக்காடாகின. இதனால், பலரும் அலுவலகம் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். சிலர் விடுதிகளிலும், அரசு ஏற்பாடு செய்த தற்காலிக தங்குமிடங்களிலும் தஞ்சம் அடைந்தனர்.

மத்திய ரயில்வே மெயின் வழித்தடத்தில் சிஎஸ்எம்டியில் இருந்து தெற்கு மும்பையில் பல பகுதிகளுக்கு ரயில் சேவை சில மணி நேரங்களுக்கு நிறுத்தப்பட்டு, பின்னர் இயக்கப்பட்டன. ரயில் சேவை மீண்டும் துவங்கியபோதும், அவை மிக மெதுவாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் நீண்டநேரம் ரயில் நிலையங்களில் காத்திருந்தனர். விமான நிலைய ஓடுபாதைகளில் தண்ணீர் தேங்கியதாலும், வானிலை காரணமாகவும் 50க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மும்பையில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் அகமதாபாத், ஐதராபாத், இந்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இதுபோல், நகரில் 40க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் பஸ்கள் இயக்க முடியவில்லை.

The post 6 மணி நேரத்தில் 30 செ.மீ பெய்தது: மும்பையை புரட்டி போட்ட மழை appeared first on Dinakaran.

Related Stories: