இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹீமா கோலி மற்றும் அசானுதீன் அமானுல்லா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பான பிரமாணப் பத்திரம் எங்கே என்று இருவரிடமும் கேள்வி எழுப்பினர். அதற்கு இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை என்று பதிலளித்தனர். அப்போது பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாமல் இருக்கும் உங்கள் இருவர் மீதும் ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பினர். அப்போது வழக்கு விவகாரம் தொடர்பாக பாபா ராம்தேவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள், உங்களது மன்னிப்பை என்ன காரணத்திற்காக நாங்கள் ஏற்க வேண்டும். நீங்கள் உங்கள் தரப்பு விளக்கங்களை ஒன்றிய அரசிடம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அவை எதையும் நீங்கள் செய்யவில்லை. உங்களது தரப்பில் எதையாவது எழுதிக் கொடுத்துவிட்டு அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் செய்திருப்பது மிக தீவிரமான நீதிமன்ற அவமதிப்பு ஆகும். குறிப்பாக உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்த பின்னரும் பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கிறீர்கள். ஏற்கனவே நாங்கள் மூன்று முறை வாய்ப்பு வழங்கி விட்டோம். இன்னொரு முறை ஏன் நாங்கள் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சரமாரி கேள்வியெழுப்பினர். இதையடுத்து ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்,‘‘உச்ச நீதிமன்றம் அனுப்பிய நோட்டீசுக்கு பதஞ்சலி நிறுவனம் பதிலளித்து இருக்கிறார்கள் என்றார். நாங்கள் அனுப்பிய நோட்டீசுக்கு பதில் அளிக்கவில்லை குறிப்பாக பாபா ராம்தேவ் யோகாவிற்காக நிறைய செய்திருக்கிறார்.
ஆனால் அதற்காக அவரின் மற்ற விவகாரங்களை கண்டும் காணாமல் இருக்க முடியாது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு இதுவரை ஏன் தலையிடவில்லை என்று நீதிபதிகள் கேட்டனர். தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,‘‘இந்த விவகாரத்தில் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிராக நாங்கள் ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு இருவரும் தனித்தனியாக எழுத்துப்பூர்வ பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். அதேப்போன்று இந்த விவகாரத்தில் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் மருந்துகள் உரிமம் வழங்கும் துறை ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்படுகிறார்கள் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைத்ததோடு, அன்றைய தினம் பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ண ஆகியோர் மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
The post நவீன மருந்துகள் தொடர்பாக தவறான தகவல்; பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க மறுத்தது உச்ச நீதிமன்றம்: விசாரணை வரும் 10 தேதிக்கு ஒத்திவைப்பு appeared first on Dinakaran.