அமைச்சர் பதிலுரையை புறக்கணித்த அதிமுக

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில் பங்கேற்று ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 7 பேர் பேசினர். உறுப்பினர்கள் பேசி முடித்ததும், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து பேசினார். அவர் பேசி முடித்ததும், அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜூ எழுந்து பேச அனுமதி கேட்டார். ஆனால், சபாநாயகர் அப்பாவு அனுமதி அளிக்கவில்லை. தொடர்ந்து, சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவனை பதிலுரை அளிக்குமாறு கூறினார்.

அவரும் பதிலுரை அளிக்க தொடங்கினார். அப்போது, அதிமுக உறுப்பினர்கள் அமைச்சரின் பதிலுரையை புறக்கணித்து வெளியே சென்றனர். இதைத்தொடர்ந்து தலைமை செயலக வளாகத்தில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறும்போது, ‘‘எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னிகுயிக் சிலை குறித்து பேசினார். அதை நேரடி ஒளிபரப்பு செய்யாமல் கட் செய்து விட்டனர். ஆனால், அமைச்சர் சொல்லும் பதில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கேள்வியும் வர வேண்டும், பதிலும் வர வேண்டும். இதனை கண்டித்துதான் அமைச்சர் பதிலுரையை அதிமுக புறக்கணித்தது’’ என்றார்.

The post அமைச்சர் பதிலுரையை புறக்கணித்த அதிமுக appeared first on Dinakaran.

Related Stories: