பள்ளிப்பட்டு அருகே பரபரப்பு வாந்தி, பேதிக்கு வாலிபர் பலி 14 பேருக்கு தீவிர சிகிச்சை: மருத்துவ முகாம் அமைத்து சுகாதாரப்பணி

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே கிராமமக்கள் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் வாலிபர் இறந்த சம்பவம் கிராமமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிப்பட்டு ஒன்றியம் நொச்சிலி ஊராட்சிக்கு உட்பட்ட கொத்தூர் அருந்ததியர் காலனியில் 40க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிராமமக்களுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் உட்பட 14க்கும் மேற்ப்பட்டோருக்கு வாந்தி, பேதி, மற்றும் வயிற்று வலி ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சாம்பசிவம்(27) என்ற வாலிபருக்கு கடந்த 19ம் தேதி வாந்தி, பேதி மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார்.

மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலகம்மா(35), ரமேஷ்(42), நாகராஜ்(18), கிரிராஜ்(26) ஆகியோருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டு, ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஒருவர், அத்திமாஞ்சேரிபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 10 பேர் சிகிச்சை பெற்று நேற்று வீடுகளுக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கிராமத்தில் வாந்தி, பேதிக்கு வாலிபர் இறந்த நிலையில் 14க்கும் மேற்ப்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்நிலையில், வட்டார மருத்துவ அலுவலர் தனஞ்செழியன் தலைமையில் மருத்துவ குழுவினர் கிராமத்தில் முகாமிட்டு கிராமமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை மருந்து மாத்திரை வழங்கி தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், உதவி இயக்குநர் பரணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், அருள் ஒன்றிய குழுத் தலைவர் ஜான்சிராணி விஸ்வநாதன் ஆகியோர் கிராமத்தில் சுகாதாரம் மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு செய்தனர்.

* ஆய்வுக்கு குடிநீர் மாதிரி அனுப்பிவைப்பு
கிராமமக்கள் வாந்தி பேதி ஏற்ப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உத்தரவின் பேரில் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக மேல் நிலை நீர்தேக்க தொட்டியிலிருந்து குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. கிராமமக்களுக்கு குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினர் குடிநீர் பைப் லைன்கள் ஆய்வு செய்து, குடிநீர் மாதிரி ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். குடிநீர் ஆய்வு அறிக்கை வந்த பிறகே கிராமமக்களுக்கு வாந்தி, பேதி மற்றும் வயிற்று வலி ஏற்ப்பட்டதற்கு காரணம் தெரிய வரும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

* அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் மீது குற்றச்சாட்டு
கிராமத்தில் உள்ள மேல் நிலை நீர் தேக்க தொட்டி முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை. கழிவுநீர் கால்வாய்கள் பல மாதங்களாக சுத்தப்படுத்தாமல், கழிவுநீர் தேங்கி நிற்பதாகவும், அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் சிட்டியம்மா கிருஷ்ணமாவை சந்தித்து புகார் செய்ய முடியவில்லை என்று கிராமமக்கள் குற்றம் சாட்டினர்.

The post பள்ளிப்பட்டு அருகே பரபரப்பு வாந்தி, பேதிக்கு வாலிபர் பலி 14 பேருக்கு தீவிர சிகிச்சை: மருத்துவ முகாம் அமைத்து சுகாதாரப்பணி appeared first on Dinakaran.

Related Stories: