குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையின் 90 ஆண்டுகால வரலாற்றில் 19வது முறையாக ஜூன் 12ம் தேதி நீர் திறப்பு!!

மேட்டூர்: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையின் 90 ஆண்டுகால வரலாற்றில் 19வது முறையாக ஜூன் 12ம் தேதி நீர் திறக்கப்பட்டது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், அரியலூர் உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 17.37 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் பருவமழையை எதிர்நோக்கி குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். ஜூன் 12 முதல் ஜனவரி 28 வரை குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு 220 நாட்களுக்கு 330 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும். பாசன பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து பாசன தேவை குறையும்.

இந்த நிலையில், தொடர்ந்து 3வது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி, அதாவது இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை சுமார் 10 மணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அணையின் வலதுகரையில் உள்ள மேல்மட்ட மதகுகளை மின் விசையால் இயக்கி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார்.அணையின் மதகுகள் வழியாக சீறி பாய்ந்த காவிரி நீரை மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். தொடக்கத்தில் வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் திறக்கப்படும் தண்ணீர் படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரிக்கப்படும். மேட்டூர் அணையிலிருந்து இன்று திறக்கப்படும் தண்ணீர் மூன்றரை நாட்களில் 200 கிமீ தொலைவில் உள்ள கல்லணையை சென்றடையும்.தண்ணீர் திறப்பையொட்டி, மேட்டூர் அணையின் வலதுகரையில் விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது.

மேல்மட்ட மதகின் மேல் பகுதியில் மின்விசை அமைக்கப்பட்டு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நிற்பதற்காக தனி மேடை அமைக்கப் பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணை மின்நிலையம், சுரங்க மின்நிலையம் மற்றும் 7 கதவணைகளில் அதிகபட்சமாக 460 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ப்படும்.மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 103.35 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 867 கன அடியாக உள்ளது.நீர் இருப்பு 69.33 டிஎம்சியாக உள்ளது.

The post குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையின் 90 ஆண்டுகால வரலாற்றில் 19வது முறையாக ஜூன் 12ம் தேதி நீர் திறப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: