மரபு விதைகளை சேகரிக்கும் மெக்கானிக்கல் இன்ஜினியர்

இயற்கை விவசாயத்தில் உணவுக்காடு

இளம் வயதிலேயே உணவுக்காடு அமைக்கும் லட்சியத்துடன் மரபு மாறா விதைகளைத் தேடித்தேடி சேகரித்து தன் நிலத்தை நஞ்சில்லா நிலமாக மாற்றி இயற்கை விவசாயம் செய்து வருகிறார் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுகா புனல்குளம் தெத்துவாசல்பட்டியை சேர்ந்த விஜய். படித்தது மெக்கானிக்கல் இன்ஜினியரிங். இப்போது இயற்கை விவசாயி. இரண்டரை ஏக்கரில் மா, பலா, செவ்வாழை, ரஸ்தாலி, பூவன், நேந்திரம், வெண்டைக்காய், கத்திரிக்காய், சிவப்புக்கீரை, கொத்தவரங்காய், வெண்ணெய்ப் பூசணி, பரங்கிக்காய், சுரைக்காய், வெள்ளைப் பூசணி என முழுக்க முழுக்க இயற்கை விவசாயம் செய்து வரும் விஜயை சந்தித்துப் பேசினோம்.
“நாம் சாப்பிடும் உணவு நஞ்சில்லாமல் இருந்த காலத்தை மீண்டும் கொண்டு வர முடியுமா? என்று எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது. இந்த கேள்வி கொரோனா காலக்கட்டத்தில் அதிகமாக வந்துச்சி. இதனால் இயற்கை வேளாண்மையை உறுதியா செய்யறதுன்னு முடிவு பண்ணேன். கல்லூரி இறுதி ஆண்டு படிச்சிட்டு இருக்கும்போதே, வேளாண்மையில முழுமையாக ஆர்வம் ஏற்பட்டது. படிக்கும்போதே ஒரு கம்பெனியின் வேலை பார்த்தேன். ரூ.15 ஆயிரம் சம்பளம். ஆனால் மனம் முழுக்க விவசாயத்துலதான் இருந்துச்சு. எதுக்காக சம்பாதிக்கிறோம்? அந்த பணத்தை, என்னெல்லாம் பண்ணுவோம்? அப்படின்னு யோசிச்சேன். அடிப்படை இரண்டுதான். ஒண்ணு உணவு, இன்னொன்னு உடை. இதுக்குதான் செலவு பண்றோம் அப்படின்னு தோணுச்சு. அப்பா சந்திரசேகர் விவசாயத்தை பாரம்பரியமா பண்ணிட்டுதான் இருக்கறாங்க. என்ன ஒன்னு! அவங்க ரசாயனம் போட்டு பண்றாங்க. மண்ணோடு முண்டிக்கிட்டுதான் இருக்கறாங்க. ஆனா, எதுவும் பண்ண முடியலை. கையில காசு நிக்கிறது கிடையாது.

அப்பதான் எனக்கு தோணியது நல்ல உணவு சாப்பிடணும். நல்ல உணவை மத்தவங்களுக்கு கொடுக்கணும்னு. இதை, இன்னொருத்தரை செய்யுங்கன்னு சொல்றத விட, நாமே செய்வதுதான் சரின்னு தோணுச்சு. நம்மகிட்ட வாய்ப்பு இருக்கு. அப்படின்னு தோணுச்சு. அப்பாகிட்ட சொன்னப்ப ஆரம்பத்துல ஏத்துக்கலை. அதுவே எனக்கு கொஞ்சம் சவால்தான். அப்ப சின்ன வயசுல நான் வளர்த்து நல்லா நிக்கிற எங்க தோட்டத்து கொய்யா மரத்தை உதாரணமா காமிச்சு. இதுக்கு இயற்கை உரம் போட்டேனே. எப்படி காய்ச்சுக்கிட்டு இருக்கு என்று கேட்டேன். அந்தக் கேள்வி எங்க அப்பாவை கொஞ்சம் யோசிக்க வைச்சுச்சு. இருந்தாலும் 10 சென்ட் நிலம் மட்டும்தான் ஒதுக்கிக் கொடுத்தார். என்ன சாகுபடி செய்வது என்று நினைச்ச எனக்கு சின்ன பாவக்காய் சாகுபடி செய்வோம்னு தோணுச்சு. வீட்டுல ஆடு, மாடு இருந்தது. அதனால் அதன் சாணத்தை எருவாக்கி நிலத்தில் தெளித்து பாவக்காய் சாகுபடி செய்தேன். உணவுக்கு அடிப்படை நெல். அதுக்கு அடுத்ததா காய்கறிதானே. அதுவும் காய்கறியிலதான் ரசாயன உரம் நேரடியா படுது. மத்ததுல எல்லாம் உரத்தை கீழே தெளிப்பாங்க. வாழை, நெல், தென்னைக்கு எல்லாத்துக்கும் இப்படிதான். ஆனா, காய்கறியிலே பூச்சின்னா, நேரா மேலேயே ஸ்பிரே பண்ணுவாங்க. அறுவடை செய்து வித்திடுவோம். அதை கழுவும் வாய்ப்பு கிடைக்காது. அதனால்தான் ரசாயனம் இல்லாத காய்கறி சாகுபடியை தேர்ந்தெடுத்தேன். பாகற்காய் அருமையான விளைச்சல். இன்னும் சரியானபடி சாகுபடி செய்து இருந்தா மூன்று மடங்கு கிடைச்சிருக்கும்.

விளைஞ்ச காயை, நம்ம காசாக்கிக்கலாம். வீட்டுக்கும் ஆரோக்கியமான காய் கிடைச்சுரும். வருமானத்துக்கு வருமானமும் வந்துரும், அப்படின்னு தோணுச்சு. அறுவடை செஞ்ச பாகற்காயை அம்மா ராஜேஸ்வரி தெரிஞ்சவங்களுக்கு விற்பனை செய்தாங்க. நான் பக்கத்து ஊருல கடைகளில் விற்றேன். நல்ல லாபம் கிடைச்சுச்சு. என் அப்பாவுக்கும் என் மேல் நம்பிக்கை வந்துச்சு. அப்புறம் 10 சென்ட்ல பாவக்காய்தான் போட்டோம். அதுல ஊடுபயிரா வந்து, முள்ளங்கி போட்டிருந்தோம். ஆனா, சரியா செய்யாததுனால அதிக விளைச்சல் எடுக்க முடியலை. பாவக்காய் அறுவடை செய்து விற்றதில் செலவுகள் ரூ.11 ஆயிரம் போக கிடைச்சுச்சு. அம்மா விற்றது ரூ.5 ஆயிரம். நான் வாரத்துல மூணு நாளைக்கு ஒரு தடவை, பறிச்சு தஞ்சாவூர் புது பஸ்ஸ்டாண்டில் உள்ள கடைக்கு விற்பனைக்கு கொடுத்தேன். இதில் கிடைத்தது ரூ.6 ஆயிரம். இயற்கை சாகு படியில் விளைஞ்சதுனு சொல்லி விற்பனை செய்தோம். அதுக்கு பிறகு அம்மாவும், அப்பாவும் முழுசா என்னை நம்பினாங்க. கூடவே அவங்க உழைப்பையும் எங்க நிலத்துல காண்பிச்சாங்க. தொடர்ந்து செவ்வாழை, ரஸ்தாலி, மொந்தன் பழம் என வாழை சாகுபடி செய்து நல்ல லாபம் கிடைச்சது. இப்ப இரண்டரை ஏக்கரில் தக்காளி, கொத்தவரங்காய், குறுவை வெண்டைக்காய், மல்டி கலர் சோளம், வெள்ளை மக்காச்சோளம், சிவப்புச் சோளம், மிளகாய், சுரைக்காய், பரங்கி, பூசணிக்காய், சிவப்புக் காராமணி, பச்சை, சிவப்பு நாட்டுக் காராமணி, சீசனில் மட்டும் மரவள்ளி, சர்க்கரைவள்ளிக்கிழங்கு என்று சாகுபடி செய்தேன்.

இதுக்கு முன்னாடி ஐயா நம்மாழ்வாரின் சீடர் ஏங்கல்ஸ் ராஜாவிடம் சாகுபடி முறைகள், நிலத்தை தயார் செய்வது பற்றி பயிற்சி எடுத்தேன். பட்டுக்கோட்டையில் பிச்சினிக்காட்டுல விதைகளே பேராயுதம் என்ற பயிற்சி முகாம் நடந்துச்சு. ஒரே நாள்ல கிட்டத்தட்ட தமிழகமெங்கும் பல இடங்கள்ல நடந்துச்சு. விதைகள்தான் நம்மகிட்ட இருக்கக்கூடிய பேராயுதம்ன்னு. அதில் எடுத்த பயிற்சி வானகம் என்ற இயற்கை உணவு சம்பந்தமான அமைப்பு மற்றும் வள்ளுவம் இப்படி தொடர்ந்து பயிற்சி எடுத்தேன். இதனால் பழக்கம் அதிகரித்தது. தேடித் தேடி பலவகை நாட்டு ரக காய்கறி விதைகளை சேகரித்தேன். இப்ப நானும் பலருக்கு பயிற்சி கொடுக்கிறேன். தோட்டம் எப்படி அமைக்கிறதுன்னு சொல்லியும் தரேன். தோட்டம் அமைச்சும் தரேன்.

இந்த பயிற்சிகள் என்னோட தோட்டத்தை சரியான முறையில் பராமரிக்க உதவிச்சு. தண்ணீர் தேவையை குறைக்க சொட்டுநீர்ப் பாசனத்தை அமைச்சேன். அப்போதான் உணவுக்காடு அமைக்கணும்னு தோணுச்சு. இதற்கு இடையில் காய்கறித் தோட்டத்தில் விற்பனை செய்தது போக ஏராளமாக விதைகளை சேகரிச்சேன். அப்போ உணவுக்காடு பத்தி அப்பாக்கிட்ட சொன்னப்ப, சந்தோஷமா செய்யுன்னு உற்சாகம் கொடுத்தார். அப்படித்தான் வாழை, அதற்கு இடையில் சரியான இடைவெளி விட்டு தென்னை என்று பயிரிட்டேன். உழவுச்செலவை குறைச்சேன். இயற்கை இடுபொருட்கள் மட்டுமே நிலத்திற்கு போதும் என்று நிரூபிச்சேன். யார்கிட்டயும் விதைக்காக நிற்கக்கூடாது. நாம் சாகுபடி செய்வதில் இருந்தே விதையும் சேகரிக்கணும். இதுதான் உணவுக்காட்டின் அடிப்படை. இப்ப அதைத்தான் செய்துக்கிட்டு இருக்கேன்.

பயிர்களுக்கு பஞ்சகவ்யா, மீன் அமிலம், பழக்கரைசல், மூலிகைப்பூச்சி விரட்டி தெளிக்கிறேன். வீட்டில் வளர்க்கிற மாடு, கோழிகளுக்கு தீவனமும் என் வயலிலேயே சாகுபடி செய்கிறேன். பூசணியில் 7 வகை, சுரைக்காயில் 6 வகை, வாழையில் 7 வகை, வெண்டைக்காய், கத்திரி நாட்டு விதைகள் சேகரித்து வைத்துள்ளேன். சோளத்தில் பல வகைகள் சாகுபடி செய்து வீட்டு உபயோகம், விற்பனை போக விதைகள் சேகரித்து வைத்துள்ளேன். பண்ணை அமைக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கிறேன். நானே நேரடியாக பண்ணையும் அமைச்சு தந்து எப்படி சாகுபடி செய்றதுன்னு சொல்லித் தர்றேன். இன்னும் நம்ம முன்னோர்கள் சாகுபடி செய்த மரபுமாறாத நாட்டு விதைகளை தேடி சேகரிச்சுக்கிட்டு இருக்கேன்.

காய்கறித் தோட்டம் மட்டுமின்றி மரபுமாறாத 28 வகை விதை களையும் விற்பனை செய்கிறேன். அரைக்கீரை, தண்டுக்கீரை, சிவப்பு தண்டுக்கீரை, முளைக்கீரை, புளிச்சக்கீரை சாகுபடி செய்து விதைகளையும் சேகரிச்சி வச்சிருக்கேன். பாரம்பரிய தென்னை ரகங்கள் (ஈத்தாமொழி) நட்டிருக்கேன். என்னோட பண்ணையில விளையும் காய்கறிகள்தான் எங்க வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்துறோம். இந்த காய்கறி விற்பனை, வாழைப்பழம், வெள்ளரி விற்பனையில் மாதம் ரூ.20 ஆயிரத்துக்கும் மேல கிடைக்கிது. வருசத்திற்குன்னு பார்த்தா ரூ.3 லட்சம் வரைக்கும் வருமானம் கிடைக்கிறது. மாப்பிள்ளை சம்பா, கருப்புக்கவுனி, தூயமல்லி நெல் ரகமும் சாகுபடி செய்து வீட்டு உபயோகத்திற்கு போக விற்பனை செய்றேன். தரமான விதை நெல்லையும் சேகரிச்சு வைக்கிறேன். சுரைக்காய் கூடுகளில் விதைகளை சேகரிச்சு வைப்பதால் எத்தனை மாதங்கள் ஆனாலும் விதை அப்படியே இருக்கும். இப்படி வாழவரங்காய், பாகற்காயில் இரண்டு வகையும், சிவப்பு சோளம், கறுப்புச் சோளம், பூனைக்காலி சோளம் விதை, அவரை, தக்காளியில் மட்டும் பலவகை இருக்கு. வெண்டைக்காய் விதைகளும் சேமித்து வச்சிருக்கேன்.
அப்பா, அம்மா, நான் என 3 பேரும் சேர்ந்து குடும்பமாகத்தான் தோட்டத்தில் வேலை பார்ப்போம். இதனால் ஆட்கள் கூலியும் மிச்சம். தேவைப்படும்போது அதாவது களை எடுக்க மட்டும் ஆட்களை அழைச்சுக்குவோம். நம் முன்னோர்கள் போல் ஆரோக்கியமான உணவை நாங்களும் சாப்பிடணும், மக்களும் சாப்பிடணும் என்பதுதான் என்னோட மிகப்பெரிய ஆசை. காய்கறிகளை தேடிவந்து வாங்கிக்கிட்டு போறாங்க. இதுவே எனக்கு பெரிய சந்தோசம். உணவுக்காட்டை முழுமையாக அமைச்சுட்டா பெரிய வெற்றிதான். நிச்சயம் அதையும் செய்து முடிச்சிடுவேன். இப்போ அதில் முக்கால்வாசி பணிகள் முடிச்சிருக்கேன்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
விஜய்
63749 43575

The post மரபு விதைகளை சேகரிக்கும் மெக்கானிக்கல் இன்ஜினியர் appeared first on Dinakaran.

Related Stories: