அதே சமயம், இந்த சட்டம் மத ரீதியாக பாகுபாடு காட்டுவதாகவும், அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை மறுக்கப்படுவதாலும் நாடு முழுவதும் சிஏஏ சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் வெடித்தன. 2020ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சிஏஏ எதிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு சிஏஏ விவகாரத்தில் அமைதி காத்து வந்த ஒன்றிய பாஜ அரசு, இதுதொடர்பான சட்ட விதிகளை வகுக்க பலமுறை காலஅவகாசம் கோரியது. எந்தவொரு சட்ட மசோதாவிற்கும் ஜனாதிபதி ஒப்புதல் அளித்த அடுத்த 6 மாதத்தில் சட்ட விதிகள் உருவாக்கப்பட வேண்டும். சிஏஏ விவகாரத்தில் இந்த விதிகள் உருவாக்கப்படவில்லை என்பதால் பலமுறை ஒன்றிய அரசு அவகாசம் கேட்டது. அதே சமயம், மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தலுக்கு முன்பாகவே சிஏஏ சட்டம் கட்டாயம் அமல்படுத்தப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அறிவித்தார்.
இந்நிலையில், சிஏஏ சட்டத்திற்கான விதிகள் அரசிதழில் வெளியிடப்பட்டிருப்பதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதன் மூலம் நாடு முழுவதும் சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்ட திருத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘சிஏஏ விதிகள் 2019ன் கீழ் தகுதியான நபர்கள் இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் முற்றிலும் ஆன்லைன் முறையில் நடக்கும். அதற்காக தனி இணையதளம் உருவாக்கப்படும். விண்ணப்பதாரர்களிடம் இருந்து எந்த ஒரு ஆவணமும் கேட்கப்படாது’’ என்றார். தேர்தலில் ஆதாயம் அடைய வேண்டுமென்ற மறைமுக நோக்கத்துடன் ஒன்றிய பாஜ அரசு சிஏஏ சட்டத்தை அமல்படுத்தியிருப்பதாக நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
* டெல்லியில் பாதுகாப்பு
சிஏஏ சட்டம் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து டெல்லி, ஷாஹீன் பாக், ஜாமியா உட்பட முக்கியமான பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு டெல்லியின் சில பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு, சில பகுதிகளில் காவல்துறையினரும் துணை ராணுவப் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 2020ல் சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் கடுமையான கலவரங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.
* மோடியின் பொய்களுக்கு இன்னொரு உதாரணம்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டரில், ‘‘தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பிற்குப் பிறகு இந்த அறிவிப்பு தலைப்புச் செய்திகளை மாற்றுவதற்கான முயற்சி. 2019ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கான விதிகளை வகுக்க 4 ஆண்டு, 3 மாதங்கள் ஆகி உள்ளன. இதுவரை இதற்கு 9 முறை காலஅவகாசம் கேட்டுள்ளனர். இப்போது தேர்தலை மனதில் வைத்து மக்களை பிளவுபடுத்த நேரம் பார்த்து சிஏஏ விதிகள் அறிவிக்கப்பட்டிருப்பது பிரதமரின் அப்பட்டமான பொய்களுக்கு மற்றொரு உதாரணம்’’ என்றார். மேற்கு வங்க முதல்வர் மம்தா கூறுகையில், ‘‘மக்களை பாரபட்சமாக நடத்தும் எதையும் நாங்கள் எதிர்ப்போம். சிஏஏ விதிகளை பார்த்து விட்டு பேசலாம்’’ என்றார்.
* கடந்த 2 ஆண்டுகளில் குடியுரிமைச் சட்டம் 1955ன் கீழ் குஜராத், ராஜஸ்தான், சட்டீஸ்கர், அரியானா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 9 மாநிலங்கள் அண்டை நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கி உள்ளன
* இந்த 9 மாநிலங்களில் உள்ள 30க்கும் மேற்பட்ட கலெக்டர்கள் மற்றும் உள்துறைச் செயலர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
* 2021-22ம் ஆண்டிற்கான உள்துறை அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கையின்படி, ஏப்ரல் 1, 2021 முதல் டிசம்பர் 31, 2021 வரை, 1,414 வெளிநாட்டவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
* அசாம், மேற்கு வங்கத்தில் உள்ள எந்த அதிகாரிகளுக்கும் குடியுரிமை வழங்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை.
The post மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் அமலானது: சட்ட விதிகளை அரசிதழில் வெளியிட்டது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.