அதன்படி மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் அதிக எண்ணிக்கை கொண்ட பெரிய குடும்பங்கள் உள்ளது என தெரிகிறது. அதில் குறிப்பாக சென்னையில் ஒரே குடும்ப அட்டையில் 20 பேர் பெயர்கள் இருப்பதாக உணவுப்பொருள் வழங்கல் துறை தரவுகளை வெளியிட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் அப்பர்சாமி கோயில் தெருவில் 89 வயதான ஓய்வு பெற்ற முன்னாள் சென்னை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ஏ.ஆர்.வெங்கடேசன் குடும்பம் வசித்து வருகிறது. மிகப்பெரிய குடும்பம் என்பதால் கடந்தாண்டு குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசிப்பது தெரியவந்தது. இதுகுறித்து குடும்பத்தின் மூத்த நபரான ஏ.ஆர்.வெங்கடேசன் கூறியதாவது: இந்த வீடு என் அப்பா 1942ம் ஆண்டு கட்டினார். எனக்கு 5 மகன்கள் உள்ளனர்.
அனைவரும் ஒரே வீட்டில் தனித்தனி குடியிருப்புகளில் வசிக்கிறோம். மொத்த குடும்ப உறுப்பினர்களும் 6 குடியிருப்புகளை கொண்ட இரண்டு அடுக்குமாடி கொண்ட ஒரே பெரிய வீட்டில் வசித்து வருகின்றனர். வீட்டில் மொத்தம் 30 பேர் இருக்கின்றனர். குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயரையும் ஒரே குடும்ப அட்டையில் சேர்க்க பல சிக்கல்களை சந்தித்து வருகிறோம். எனக்கு 2000ல் சக்கரை அட்டை வழங்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக ரேஷன் கடையில் பொருட்களை வாங்கி கொண்டிருந்தோம். 20 வருடங்களுக்கு முன்னர் அட்டை வழங்கப்பட்டபோது 24 பெயர்கள் இருந்தது. ஆனால் தற்போது புதிய அட்டையில் 20 பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. ேமலும் 8 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக குடும்ப அட்டை வடிவமைப்பில் அதிகாரிகள் மாற்றங்களை செய்துள்ளனர். இந்நிலையில் எங்கள் குடும்பத்தை கூட்டுக் குடும்பம் என்று அழைப்பதற்கு பதிலாக பெரிய குடும்பம் என்று அழைக்க வேண்டும்.இவ் வாறு அவர் கூறினார்.
வெங்கடேசனின் மகன் கோதண்டம் கூறியதாவது: 2006- 07 ஆண்டுகளில் தனியாக புதிய குடும்ப அட்டைக்கு பதிவு செய்ய விண்ணப்பித்தோம். ஆனால் நாங்கள் வேறு முகவரிக்கு மாறினால் தான் தனி அட்டை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். எங்களுக்கு வேறு இடத்திற்கு மாறுவதற்கு விருப்பமில்லை. இதனால் எங்கள் குடும்பத்தில் மொத்தமாக 30 பேர் உள்ள நிலையில் 10 பேர் பெயர்களை நாங்கள் சேர்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரி கூறியதாவது: டிஜிட்டல் முறையில் மாற்றும் நோக்கோடு குடும்ப அட்டைகள் ஆதாருடன் இணைக்கப்பட்டதால் தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்களின் அமைப்பை கண்டறிய உதவுகிறது. ஒரு குடும்பத்திற்கு 2 முதல் 3 பேர் உள்ளனர். பல காரணங்களுக்காக மகன், மகள் தனியே சென்ற பிறகும் கூட அவர்கள் பெயர்களை நீக்காமல் பலரும் வைத்துள்ளனர். மேலும் பல குடும்ப அட்டைகள் பல ஆண்டு பயன்படுத்தாமலும் உள்ளது. சில குடும்பங்கள் சர்க்கரை, பருப்பு வாங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 2.24 கோடி குடும்ப அட்டைகளில் 1.7 கோடி அட்டைதாரர்கள் மட்டுமே மாதத்திற்கு ஒரு பொருட்களை வாங்கி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
The post தமிழகத்தில் வசிக்கும் மிகப்பெரிய கூட்டு குடும்பம்; மயிலாப்பூரில் ஒரே குடும்ப அட்டையில் 20 பெயர்: 10 பேரை இணைப்பதில் சிக்கல் appeared first on Dinakaran.