குமரியில் குடிமகன்களின் கூடாரமான கல்மண்டபம்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் பழமை வாய்ந்த கல்மண்டபங்கள் பல உள்ளது. மன்னர் ஆட்சிகாலத்தில் பொதுமக்களுக்கு முன்னுரிமை கொடுத்து பல வழிவகைகள் செய்யப்பட்டு இருந்தது. இதில் ஒன்று கல்மண்டபங்கள். பொதுமக்கள் நடந்து செல்லும்போது இருந்து இளைப்பாரவும், இரவு நேரத்தில் தூங்க பயன்படுத்த மன்னர் காலங்களில் பல இடங்களில் கட்டப்பட்டு உள்ளன. இவைகள் அனைத்தும் கல்லால் கம்பிரமாக கட்டப்பட்டு உள்ளது. காலபோக்கில் போதிய பராமரிப்பு இல்லாமல் அனைத்து கல்மண்டபங்களும் சிதலம் அடைந்து காணப்படுகிறது.

குமரி மாவட்டம் குமாரபுரம் அருகே உள்ள தவறகுழியில் கம்பீரமான கல்மண்டபம் உள்ளது. இந்த கல் மண்டபத்தில் மீன் சின்னம் உள்ளதால், பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கடந்த காலங்களில் இந்த மண்டபத்தில் பலர் ஓய்வு எடுத்து சென்று இருப்பார்கள். அப்படிபட்ட இந்த மண்டபம் பராமரிப்பு இல்லாமல் மேல்பகுதிகளில் புதர் முளைத்துள்ளது.

மேலும் செங்கல் கட்டுகளும் உடைந்து, கல்மண்டபத்தில் உள்ள கல்கள் பெயர்ந்து காணப்படுகிறது. ஆனால் தனது தனித்துவத்தை மட்டும் இழக்காமல் இருந்து வருகிறது. பழுதுபட்டு காணப்படும் கல்மண்டபத்தை இரவு நேரத்தில் குடிமகன்கள் பயன்படுத்தி வருகின்றனர். அங்கு காலி மதுபாட்டில்கள், தின்பண்ட கவர்கள் சிதறிகிடக்கிறது. மன்னர்கள் பொதுமக்களின் தேவைக்கு கல்மண்டபத்தை கட்டினார்களோ அதனை வருகிற சந்ததியினரும் அறியும் வகையில் கல்மண்டபத்தை பராமரித்து பேணிகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

The post குமரியில் குடிமகன்களின் கூடாரமான கல்மண்டபம் appeared first on Dinakaran.

Related Stories: