குமராட்சி அருகே சாலை உள்வாங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி

*நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சேத்தியாத்தோப்பு : குமராட்சி அருகே 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை உள் வாங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். கடலூர் மாவட்டம் குமராட்சி அருகே உள்ள கீழக்கரை, கோப்பாடி அடுத்த நந்திமங்கலம்-நளன்புத்தூர் இடையே 3 கிலோ மீட்டர் தூரம் வரை தார்சாலை உள் வாங்கி உள்ளது. குமராட்சி வழியாக கீழக்கரை, கோப்பாடி, நந்திமங்கலம், நளன்புத்தூர், தெற்கு மாங்குடி, வடக்குமாங்குடி, உள்ளிட்ட கிராமங்களின் வழியே குறுகிய நேரத்தில் சிதம்பரம்-மயிலாடுதுறை சாலையை இணைக்கும் விதமாக இந்த தார்சாலை அமைந்துள்ளது. முற்றிலும் நெல், சோளம், வாழை உள்ளிட்டவைகளை உயிர் மூச்சாக விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

அதிகம் விவசாயம் சார்ந்த கிராமங்கள் அதிகம் உள்ள நிலையில் 3 கிலோ மீட்டருக்கு தார்சாலை உள்வாங்கியுள்ளதால் அவசர வாகனங்களான 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மினி பஸ்கள் குறித்த நேரத்திற்கு சென்று வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் இரவு நேரத்தில் இந்த சேதமான சாலையின் வழியாக இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும்போது உள்வாங்கிய சாலையில் தவறி விழுந்து அடிபட்டு வருகின்றனர்.

மழை நாட்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து காயமடைந்து வருகின்றனர். இது குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் நீண்ட நாட்களாக சாலையை சீரமைக்காமல் இருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே உள்வாங்கி சேதமடைந்து காணப்படும் சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குமராட்சி அருகே சாலை உள்வாங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: