காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு நாளை அறிக்கை தாக்கல்

புதுடெல்லி: ‘ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக நாளை விரிவான அறிக்கை வெளியிடப்படும்’ என ஒன்றிய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சட்டப்பிரிவு 370ன் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ஒன்றிய அரசு கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. அதோடு, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கை இரு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், இயல்பு நிலை திரும்பியதும் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என அறிவித்தது.

தற்போது 4 ஆண்டுகள் முடிவடைந்தும், காஷ்மீரில் இதுவரையிலும் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில், சட்டப்பிரிவு 370 ரத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி, ‘‘தேச பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டு மாநிலத்தை மறுசீரமைப்பு செய்ததை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். ஆனாலும் ஜனநாயகம் முக்கியம்.

தேர்தலே நடத்தாமல், காலவரையின்றி யூனியன் பிரதேச அந்தஸ்தை நீட்டிக்க அனுமதிக்க முடியாது. இது ஒரு முடிவுக்கு வர வேண்டும். உண்மையான ஜனநாயகத்தை எப்போது மீட்டெடுப்பீர்கள் என்பதற்கான காலக்கெடுவை அரசு தர வேண்டும்’’ என உத்தரவிட்டார். இதற்கு பதிலளித்த ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘ஜம்மு காஷ்மீருக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து நிரந்தரமானது அல்ல. அதேசமயம் லடாக்கின் யூனியன் பிரதேச அந்தஸ்து மேலும் சில காலம் தொடர வேண்டி உள்ளது. இதில் அரசின் நிலைப்பாடு குறித்து விரிவான அறிக்கை வரும் 31ம் தேதி (நாளை) தாக்கல் செய்கிறோம்’’ என தெரிவித்தார்.

The post காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு நாளை அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: