கரும்பூர் கிராமத்தில் 13ம் நூற்றாண்டை சேர்ந்த சப்தமாதர்கள் சிற்பம் கண்டெடுப்பு

பண்ருட்டி : விழுப்புரம் அறிஞர் அண்ணா கலை கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ் மற்றும் அதே கல்லூரியில் வரலாற்று துறை முனைவர் பட்ட ஆய்வாளர் இம்மானுவேல் ஆகியோர் பண்ருட்டி அருகே கரும்பூர் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது போலீஸ்காரர் கருணாகரன் என்பவர், ஊரில் உள்ள கொய்யாதோப்பு பகுதியின் வேப்ப மரத்தடியில் பழமையான கற்சிற்பங்கள் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அங்கிருந்த கற்சிற்பத்தை ஆய்வு செய்ததில் 13ம் நூற்றாண்டை சேர்ந்த சப்த மாதர்களின் சிற்பம் என தெரியவந்தது.

இது குறித்து அவர்கள் கூறுகையில், சப்தமாதர்களுக்கு தொடக்க காலத்தில் படிமங்கள் ஏதும் உருவாக்கப்படாமல் ஏழு கற்களை பிரதிஷ்டை செய்து கடவுளாக எண்ணி வணங்கினர். சோழர்கள் தாங்கள் எடுப்பித்த கோயில்களில் அனைத்திலும் சப்தமாதர்களுக்கு திருமேனி எடுத்து சிறப்பித்தனர்கரும்பூர் பகுதியில் கண்டெடுத்த சோழர்கால சப்தமாதர்கள் வராகி, கவுமாரி, சாமுண்டி, வைஷ்ணவி, பிராமி, வீரபத்திரன் மற்றும் மற்றொரு சிற்பம் தலையில்லாமல் இருப்பதால் அச்சிற்பத்தில் உள்ளது யார் என்று தெரியவில்லை.

அதுமட்டும் அல்லாமல் இன்னொரு சிற்பமும் காணவில்லை. ஆனால் அவரவர்களுக்குரிய ஆயுதங்கள், சின்னங்கள் மற்றும் அணிகலன்களுடன் காட்சியளிக்கிறார்கள். பொதுவாக இவர்களுடன் கணபதி மற்றும் வீரபத்திரர் இருப்பார்கள். ஆனால் இங்கு வீரபத்திரர் இருக்கிறார், கணபதி காணப்படவில்லை. இங்கே இருக்கிற சிற்பங்களை பார்க்கும் போது இப்பகுதியில் சிவன் அல்லது சப்தமாதர்கள் கோயில் இருந்திருக்கலாம் என அறியமுடிகிறது, என்றனர்.

The post கரும்பூர் கிராமத்தில் 13ம் நூற்றாண்டை சேர்ந்த சப்தமாதர்கள் சிற்பம் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: