சென்னையில் 40 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவு!

சென்னை: சென்னையில் 40 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை பணிகள் நடைபெற்று, முடிவுற்று புதிய அரசு மத்தியில் பதவியேற்றுள்ளது. முன்னதாக, தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

காவல் துறையை பொறுத்தவரை காவலர்கள் முதல் டிஜிபி-க்கள் வரை பணியிட மாறுதல் செய்யப்பட்டிருந்தனர். தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து, ஏற்கெனவே பணியிட மாறுதல் செய்யப்பட்டவர்கள் தாங்கள் விருப்பப்பட்ட இடங்களுக்கு பணிக்குச் செல்ல மனுக்கள் கொடுக்கலாம் என டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் அறிவித்திருந்தனர்.

இதையடுத்து சென்னை, ஆவடி, தாம்பரம் ஆகிய காவல் ஆணையர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த போலீசார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனுக்களை அளித்துள்ளார். அதன்படி சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து டிஜிபி-யும் சென்னை காவல் ஆணையரும் மூன்று நாட்களாக மனுக்களை பெற்றனர். இதன் தொடர்ச்சியாக முதல் கட்டமாக சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய காவல் மாவட்டங்களில் 40 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான புதிய பணியிடம் விரைவில் ஒதுக்கப்பட உள்ளது.

 

The post சென்னையில் 40 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவு! appeared first on Dinakaran.

Related Stories: